கோலாலம்பூர் – எல்நினோ நிகழ்வு ((El Nino phenomenon) நிகழ்வு காரணமாக தினமும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.
கடும் வெயிலால் மலேசியாவில் ஆங்காங்கே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், வாட்டி வதைக்கும் வெப்பத்தால் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள், பறவைகள், ஊர்வன உள்ளிட்டவைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக ஊர்வன வகை உயிரினங்கள் நிலத்தில் பரவும் வெப்பத்தைத் தாங்க இயலாமல் அவை, மனிதர்களின் வசிப்பிடங்களுக்குள் அழையா விருந்தாளிகளாக தஞ்சம் புகுந்துவிடுகின்றன.
இவற்றில் பெரும்பாலும், பாம்பு, உடும்பு, தேள், விஷப் பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் எளிதில் மனிதர்களின் வசிப்பிடங்களுக்குள் நுழைந்துவிட முடிகின்றது.
வீட்டிலோ, பள்ளியிலோ சிறு குழந்தைகள் அவற்றை அறியாமல் மிதித்து விடும்போதோ அல்லது அருகில் செல்லும் போதோ அவற்றால் தீண்டப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
கடந்த இரண்டு தினங்களில் மட்டும், இரண்டு பள்ளி மாணவிகள் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை, கிளந்தானில் 1-ம் ஆண்டு மாணவி நூரி நதீரா ருஸ்லான், பள்ளி வளாகத்தில் பாம்பு தீண்டப்பட்டு பரிதாபமாக உயிரழந்தது மலேசியர்களைக் கலங்க வைத்தது.
அதற்குள், நேற்று புதன்கிழமை நெகிரி செம்பிலானில் ரெம்பாவிலுள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவரை பாம்பு தீண்டியுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ஸ்டார் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை!
பெரும்பாலும் பாம்பு, உடும்பு போன்ற உயிரினங்கள் வீடுகள், கட்டிடங்களில் குளிர்ச்சியான பகுதிகளான கழிவறை, தண்ணீர் தேங்கியிருக்கும் தோட்டப்பகுதிகள், குளிர்சாதனப்பெட்டியின் பின்னால், உள்ளிட்டவைகளில் பதுங்கிக் கொள்கின்றன.
எனவே, அவற்றிலிருந்து நம்மையும், குழந்தைகளையும் தற்காத்துக் கொள்ள கொஞ்சம் எச்சரிக்கையும், விழிப்புணர்வும் அவசியம்.
குறிப்பாக, வீட்டிற்கு வெளியே வைக்கப்படும் காலணிகளைப் பயன்படுத்தும் போதோ, அதைக் குழந்தைகளுக்கு அணிவிக்கும் போது ஒருமுறை உள்ளே ஒன்றும் இல்லை என்பதை சோதனை செய்து உறுதிப்படுத்திவிட்டு அணிவது நல்லது. காலணிகளுக்குள் தேளோ, பாம்போ மறைந்திருக்கலாம். குழந்தைகளுக்கு சொல்லத் தெரியாது.
அதே போல், கார் நிறுத்தி வைக்கும் போது, அதன் கண்ணாடிகள் முழுமையாக மூடி இருக்கின்றதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். காரணம் கண்ணாடியில் சிறு இடைவெளி இருந்தால் கூட பாம்பு போன்ற உயிரினங்களால் எளிதில் உள்ளே சென்று விட முடியும்.
இன்றைய சூழலில், காடுகளும், தோட்டப்புறங்களும் அழிக்கப்பட்டு கட்டிங்கள் பெருகி வருவதால், சிறு உயிரினங்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி வருகின்றது. அவற்றைப் பாதுகாப்பதும் நம் கடமையே..
ஆகவே, வீட்டிற்கு வெளியே ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகத்தைத் தணித்து நல்லது செய்யும் அதேவேளையில், வீட்டை அடசலின்றி சுத்தமாக வைத்துக் கொண்டால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களிடமிருந்தும் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.
தொகுப்பு – ஃபீனிக்ஸ்தாசன்
படங்கள்: Jabatan Bomba & Penyelamat Malaysia.