Home Featured உலகம் அமெரிக்க இசைக் கலைஞர் பிரின்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்!

அமெரிக்க இசைக் கலைஞர் பிரின்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்!

862
0
SHARE
Ad

prince-singer-US-deadமின்னசோட்டா (அமெரிக்கா) – அமெரிக்காவின் பிரபல இசைக் கலைஞரும், ஒரு கால கட்டத்தில் மறைந்த மைக்கல் ஜாக்சனுக்கு இணையாகப் பேசப்பட்டவருமான பிரின்ஸ் நேற்று வியாழக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவரது மரணத்துக்கான காரணங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

1980ஆம் ஆண்டுகளில் மைக்கல் ஜாக்சன் போலவே தோற்றம், பாடுவது, போன்ற அம்சங்களால் உலகப் புகழ் பெற்றவர் பிரின்ஸ் (Prince). கறுப்பினக் கலைஞரான இவர்,  “கிஸ்’ (Kiss) மற்றும் “பர்பல் ரெயின்” (Purple Rain) போன்ற பாடல் தொகுப்புகளால் (ஆல்பம்) 1980ஆம் ஆண்டுகளில் உலகப் புகழ் பெற்றார்.

57 வயதான பிரின்ஸ் மிகவும் மெலிந்த நிலையில், மின்னசோட்டா நகரில் உள்ள ஒரு ஸ்டுடியோ கட்டிடத்தின் மின்தூக்கியில் (லிப்ட்) மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டார்.

#TamilSchoolmychoice

பின்னர் மருத்துவ அவசர சிகிச்சை மையத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும், எவ்வித பயனுமின்றி அமெரிக்க நேரப்படி காலை 10 மணியளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு வாரத்திற்கு முன்னர் மருத்துவமனைக்கு காய்ச்சல் என்ற காரணத்தோடு அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஒரு மருந்தகத்திற்கு அடிக்கடி சென்று வந்தார் என்று கூறப்படுகின்றது.

இடையில் தனது இரசிகர்களுக்கு “எனக்காக உங்களின் பிரார்த்தனைகளை வீணாக்காதீர்கள். இன்னும் சில நாட்கள் பொறுத்திருங்கள்” என்ற செய்தியையும் அவர் கடந்த சனிக்கிழமை விடுத்திருந்தார்.

சுமார் 40 ஆண்டுகாலம், அமெரிக்க இசையுலகின் குறிப்பிடத்தக்க கலைஞராக உலா வந்த அவருடைய 100 மில்லியனுக்கும் மேற்பட்ட இசைத் தட்டுகள் இதுவரையில் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட, உலகப் பிரபலங்களின் அனுதாபச் செய்திகள் பிரின்ஸ் மறைவுக்காக குவியத் தொடங்கியுள்ளன.