தேனி – தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஸ்ரீரங்காபுரம் கிராமத்திற்கு சென்று ஆதரவு கேட்டார். அப்போது, சிலர், ‘கடந்த முறை ஓட்டு கேட்டு வந்தபோது, விவசாயத்திற்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கச் செய்வேன் என்றாரே.
இப்போது வெறும்கையோடு வந்திருக்கிறாரே என்றனர். இதைக்கேட்ட கட்சியினர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். ஸ்ரீரங்காபுரத்தில் இருந்து புறப்பட்டு தாடிச்சேரி கிராமத்திற்கு சென்று ஆதரவு கேட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் வந்ததை பார்த்த அத்தெரு பெண்கள் கும்பலாக வந்து, ‘எங்கள் கிராமத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு முறைதான் பொதுக்குழாயில் தண்ணீர் வருகிறது. அதுவும் வீட்டிற்கு 3 குடம்தான் தண்ணீர் தருகின்றனர். பெண்கள் ஏராளமானோர் திரள்வதை பார்த்த கட்சி பிரமுகர்கள், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.
மக்கள் மன்றத்தில் பேசிவிட்டு வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வத்தை மறித்த சில பெண்கள் ‘தண்ணீர தராத நீங்கள் எங்கள் கிராமத்துக்கு வரவேண்டாம்’ என்று விரட்டினர். இதையடுத்து, ஓபிஎஸ் அங்கிருந்து முன்னாள் எம்எல்ஏ ஜெயராமன் வீட்டிற்கு சென்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.