Home அரசியல் தியான் சுவாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கும்பலில் ஒருவர் கைது

தியான் சுவாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கும்பலில் ஒருவர் கைது

786
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 16 – 9பி.கே.ஆர் உதவித் தலைவர் தியான்  சுவா நேற்று இரவு பினாங்கு மாநிலம், ஜாலான் மஸ்ஜித் கெப்பிட்டான் கெலிங் சாலையில் அமைந்துள்ள சைனீஸ் டவுன் ஹால் கட்டிடத்தில், தனது கட்சியின் சார்பாக நடைபெற்ற இரவு விருந்தில் கலந்துவிட்டு வெளியே வந்த போது அவரது காரை 50 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துத் தாக்கியது.

தியான்சுவா அங்கு வருவதற்கு முன்பாகவே ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தை முற்றுகையிட்டிருந்தனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடாமல்  தடுக்க அங்கு 40 க்கும்  மேற்பட்ட சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவல்துறையினர்  நிறுத்தப்பட்டிருந்தனர்.

சுமார் 10 மணியளவில் தியான் சுவாவின் கார் அந்த கட்டிட வளாகத்திற்குள் நுழைய முற்பட்டபோது, ஆர்பாட்டக்காரர்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து பாதுகாப்பாக தியான் சுவாவின் காரை  உள்ளே அனுப்பி வைத்தனர்.

#TamilSchoolmychoice

அதன் பின் , விருந்து முடிந்து  முக்கிய பிரமுகர்கள் சிலர் அங்கிருந்து வெளியேறிய போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை, மாறாக “தங்களது இலக்கு தியான் சுவா தான் ” என்று கூறினர்.

” யாருக்குத்  தெரியும் இவர்கள் தேசிய முன்னணியை ஆதரிப்பவர்களாக இருக்கலாம்” என்றும் ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர்  கூறினர். மேலும் அந்த முக்கிய பிரமுகர்களை மறவாமல் தேசிய முன்னணிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்கள் சென்ற அடுத்த 10 நிமிடங்களில் தியான் சுவா, விருந்து முடிந்து வெளியேறினார்.அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள்  காவல்துறையின் கட்டுப்பாட்டையும் மீறி  தியான் சுவாவின் காரை உதைத்து, தலைக் கவசங்களை வீசி எறிந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் இந்த செயலுக்குப் பின், காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்தி அமைதியாக அங்கிருந்து  கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். இந்நிலையில் ஆர்பாட்டக்காரர்களில் ஒருவரான முகமத் கனி ஜிமான் என்ற வணிகர், காவல்துறையினரை கடமையைச் செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக ,186 வது சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் பற்றி ஜார்ஜ் டவுன் மாவட்ட காவல்துறை பொறுப்பு அதிகாரியான கான் கோன் மெங் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைதிப் பேரணி நடத்தும் அவர்களை கைது செய்ய முடியாது என்றும்,அவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மட்டுமே தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரவு 11.20 மணியளவில் காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று  ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.