Home நாடு நஜிப்பின் உத்தரவினால்தான் பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை தயாரித்ததாக சிசில் ஆப்ரஹாம் ஒப்புதல்!

நஜிப்பின் உத்தரவினால்தான் பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை தயாரித்ததாக சிசில் ஆப்ரஹாம் ஒப்புதல்!

1006
0
SHARE
Ad

Bala-PI-Feature---3

கோலாலம்பூர், மார்ச் 16 – இன்று நடைபெற்ற வழக்கறிஞர் மன்றத்தின் (பார் கவுன்சில்) ஆண்டுக் கூட்டத்தில் பேசிய பாலாவின் வழக்கறிஞர் அமெரிக் சிடு, “பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் உத்தரவின் காரணமாகத்தான் தான் தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தைத் தயாரித்ததாக” வழக்கறிஞர் சிசில் ஆப்ரஹாம் ஒப்புக் கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.

பாலாவின் மரணத்தோடு அவரது சத்தியப் பிரமாணங்கள் தொடர்பான சர்ச்சைகளும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தால் மாறாக அவை இன்னும் தொடர்கின்றன.

#TamilSchoolmychoice

பாலாவின் சர்ச்சைக்குரிய இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை தயாரித்தது யார் என்பதைக் கண்டுபிடிக்கவும், அது குறித்து விசாரிக்க ஒரு சுயேச்சை விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது வழக்கறிஞர் மன்றத்தின் இன்றைய ஆண்டுப் பொதுக் கூட்டம் விவாதித்தது.

இந்த ஆண்டுக் கூட்டத்தில் வழக்கறிஞர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

மேற்கூறப்பட்ட தீர்மானத்தின் போது நடந்த விவாதத்தில் பேசிய பாலாவின் வழக்கறிஞர் அமெரிக் சிடு, “சிசில் ஆப்ரஹாம் என்னைச் சந்தித்து, அந்த இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை பிரதமர் நஜிப்புடைய உத்தரவின் பேரில் தான் தயாரித்ததாகவும், பாலாவைச் சந்தித்து உத்தரவு எதையும் தான் பெறவில்லை என்றும் ஒப்புக் கொண்டார்” என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வெளியார் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், நவீன தொலைத் தொடர்புகளான கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தி, ட்விட்டர் இணையத்தளம் ஆகியவற்றின் மூலமாக கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் இந்த தகவலை வெளியில் கசிய விட்டுள்ளனர்.

இரண்டு வாரத்துக்கு முன்பாக அமெரிக் சிடு, வழக்கறிஞர் சிசில் ஆப்ரஹாமைச் சந்தித்தார் என்றும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக் சிடு இந்த தகவலை வெளியிட்டதற்காக கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் எழுந்து நின்று கைதட்டி அவரைப் பாராட்டினர்.

இதுவரை சிசில் ஆப்ரஹாம் இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலாவின் உத்தரவில்லாமல் பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தைத் தயாரித்த வழக்கறிஞர் யார் என்பதைக் கண்டுபிடிக்கவும் அது குறித்து தனியார் விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர்களில் சிலர் இந்த தீர்மானத்தை முன்மொழிந்திருந்தனர்.

அந்த தீர்மானத்தைப் பற்றி விவாதிக்கவும், முடிவெடுக்கவும் கூடிய இன்றைய வழக்கறிஞர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் காலமான பாலாவின் குடும்பத்திற்காக 18,500 மலேசிய ரிங்கிட்டை நன்கொடையாக  கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்களிடமிருந்து வசூலித்துள்ளனர்.

தனியார் துப்பறிவாளர் பாலா எதிர்பாராதவிதமாக நேற்று காலமானார்.

மேற்கண்ட தகவல்களை ஆண்டுக் கூட்டத்தில் வெளியிட்ட பின்னர் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற பாலாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக் சிடு கூட்டத்திலிருந்து வெளியேறியதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.