கோலாலம்பூர் – தவறு செய்யும் கணவனையோ அல்லது மனைவியையோ கண்டுபிடிக்க ஸ்பெயின் நாட்டில், புதிதாக சந்தைக்கு வருகின்றது ‘ஸ்மார்ட்ரெஸ் – Smarttres’ என்றழைக்கப்படும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விவகாரமான மெத்தை.
அம்மெத்தையில் யாராவது உடலுறவு வைத்துக் கொண்டால் உடனடியாக அதன் உரிமையாளருக்கு செயலி மூலமாக, மெத்தைப் பயன்படுத்தப்பட்ட நேரம், அதிர்வு, அழுத்தம் மற்றும் வேகத்தின் அளவு என புள்ளிவிவரங்களோடு முழு நீள அறிக்கை சென்றுவிடும்.
இதன் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், அதிர்வு, அழுத்தம் மற்றும் வேகத்தின் அளவை வைத்து, உண்மையில் அம்மெத்தையில் இன்னது தான் நடந்துள்ளது என்பதை ஊகித்து அதற்கு ஏற்ப “இது நடந்திருக்கலாம்” என்று சம்பந்தப்பட்டவருக்குப் பரிந்துரைத்துவிடும் ஆற்றல் கொண்டது.
உதாரணமாக, அம்மெத்தையில் யாரேனும் நன்றாக உறங்கினால் அதன் அதிர்வை வைத்து அது ‘உறக்கம்’ என்றும், வீட்டில் உள்ள வளர்ப்புப் பிராணிகள் அதில் ஏறி குதித்தால் அதன் அளவீடுகளின் அடிப்படையிலும் அதை ‘வளர்ப்புப் பிராணிகள்’ என்றும் வகைப்படுத்திவிடும்.
அதேவேளையில், உடலுறவு போன்ற மற்ற விவகாரங்களினால் ஏற்படும் அதிர்வுகளின் அளவீடுகளும் அம்மெத்தையில் (Program) செய்து வைக்கப்பட்டிருப்பதால், உடனடியாக சம்பந்தப்பட்டவருக்குத் தகவலைப் பரப்பிவிடும்.
இந்த மெத்தையின் விலை 1,200 யூரோ அதாவது 6,700 ரிங்கிட் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.