ஈப்போ – ஈப்போவில் சேதமடைந்த ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் ஆலயத்தின் சிலைகளை மறுசீரமைப்பு செய்ய பேராக் மாநில அரசாங்கம், ஆலய நிர்வாகத்திற்கு 30,000 ரிங்கிட் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதற்கான அறிவிப்பை நேற்று மாநில சுகாதாரம், போக்குவரத்து, தேசிய ஒருமைப்பாட்டு, முஸ்லிம் அல்லாதோர் விவகாரங்கள் மற்றும் புதிய கிராமங்கள் குழு தலைவர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் அறிவித்தார்.
மேலும், காவல்துறை முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வரை, பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, சிலைகளை உடைத்த அந்நபர் சுகாதார அமைச்சைச் சேர்ந்த அதிகாரி என்பதையும் அவர் மறுத்தார்.
“சந்தேகிக்கப்படும் அந்நபர் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி 24 மணி நேர கால அவகாசத்தில் வேலையை இராஜினாமா செய்துவிட்டார். அவர் 5 நாட்கள் மட்டுமே பணியாற்றியுள்ளார். அவர் தனக்கு கிடைத்த அந்த வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டதால், அவர் சுகாதாரத்துறையின் உறுப்பினர் கிடையாது” என்றும் மா ஹாங் சூன் தெரிவித்துள்ளார்.