தூத்துக்குடி – திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.சரத்குமார் தன்னிடம் 10 கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் ரூ.8.72 கோடியில் அசையும் சொத்தும், ராதிகாவிடம் ரூ. 9.22 கோடியில் அசையும் சொத்தும் உள்ளதாக தனது வேட்புமனுவில் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சிக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் சரத்குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதையொட்டி திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி ராதிகாவுடன் வந்து நேற்று மனுத்தாக்கல் செய்தார். சரத்குமார் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், ரூ.1.81 கோடி மதிப்பிலான 10 வாகனங்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது தொழிலை நடிகர், தயாரிப்பாளர் என குறிப்பிட்டுள்ள சரத்குமார் கையில் ரொக்கமாக ரூ. 30.56 லட்சம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது மனைவி ராதிகா ரூ. 13.28 இலட்சம் ரொக்கம் கையில் வைத்துள்ளார்.
கடந்த 2013-14 ஆம் ஆண்டில் ரூ. 39.86 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், அதே நிதியாண்டில் ராதிகா ரூ. 1.25 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சரத்குமார் வசம் ரூ.8.72 கோடியில் அசையும் சொத்தும், ராதிகாவிடம் ரூ. 9.22 கோடியில் அசையும் சொத்தும் உள்ளது.
மேலும், ரூ. 29.07 லட்சம் மதிப்பிலான தங்கம், பிளாட்டினம், வைர நகைகள் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ராதிகா வசம் ரூ. 1.33 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி நகைகள் உள்ளன. இதில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான தங்க கைக்கடிகாரமும் அடங்கும்.
இதுதவிர ரூ. 19.75 கோடி மதிப்பில் சென்னை தியாகராய நகர், கொட்டிவாக்கம், படூர் கிராமம் ஆகிய இடங்களில் குடியிருப்பு கட்டங்களும் சரத்குமார் பெயரில் உள்ளன. வங்கியில் ரூ.1.10 கோடியும், தனி நபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ரூ.10.74 கோடியும் கடன் பெற்றுளதாகவும் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.