சென்னை – இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ள கோடீஸ்வர வேட்பாளர்களில் தொழில் அதிபர் வசந்த குமார் முதல் இடத்தில் உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களில் சுமார் 25 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.
வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகுதான் தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வரர்கள் எத்தனை பேர் என்பது தெரிய வரும். இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ள கோடீஸ்வர வேட்பாளர்களில் தொழில் அதிபர் வசந்தகுமார் முதல் இடத்தில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று நாங்குநேரி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அவர் தனது சொத்துக்கள் மற்றும் தம் குடும்பத்தினர் சொத்துக்கள் பற்றிய தகவல்களை உரிய ஆவணங்களுடன் கொடுத்துள்ளார்.
அதில் அவர் பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.122.53 கோடி கடன் வாங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தன் மனுவில், தனக்கு ரூ.332.27 கோடிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள வசந்த் அன்கோ கடைகளின் வருவாய் அடிப்படையில் அவர் சொத்து மதிப்பை பட்டியலிட்டுள்ளார். வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் வசந்த குமாரின் ‘வசந்த் அன்கோ’ நிறுவனம் தொடர்ந்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.