Home Featured தமிழ் நாடு இலவசத் தொலைக்காட்சி திட்டத்திலும் மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி – ஜெயலலிதா பிரச்சாரம்!

இலவசத் தொலைக்காட்சி திட்டத்திலும் மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி – ஜெயலலிதா பிரச்சாரம்!

1157
0
SHARE
Ad

jayalalithaaவிழுப்புரம் – இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்திலும் மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி. 21 அங்குலம் வழங்காமல் 14 அங்குல தொலைகாட்சி பெட்டிதான் வழங்கினார்  என்று விழுப்புர பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டினார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் மே 16 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான முதல்வர் ஜெயலலிதா நேற்று, விழுப்புரம், திருச்சி செல்லும் சாலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, அதிமுக கழக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; தி.மு.க.-வினர் 2006-ஆம் ஆண்டு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி விட்டனர்.  பெரும்பாலான வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றவே இல்லை.

#TamilSchoolmychoice

கருணாநிதியைப் பொறுத்தவரை, தேர்தலின் போது வாக்குறுதிகளை அள்ளி வீசி விடுவார்.  பின்னர் அதைச் செயல்படுத்தும் போது, அந்த திட்டத்தினால் தனக்கும் “தன் மக்களுக்கும்” என்ன ஆதாயம் கிடைக்கும்” என்று பார்ப்பார். திட்டங்களினால் தங்களுக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்றால் அந்த திட்டத்தையே செயல்படுத்தமாட்டார் கருணாநிதி. அதனால் தான், நான் தற்போது தெரிவித்த திட்டங்களை எல்லாம் கருணாநிதி செயல்படுத்தவில்லை.

கருணாநிதி தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து செயல்படுத்திய திட்டம் ஒன்று இருக்கிறது.  அது தான் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம்.  இந்த திட்டத்திலும் மக்களை ஏமாற்றவே செய்தார் கருணாநிதி.

எப்படி என்று கேட்கிறீர்களா? 2006-ஆம் ஆண்டில் வண்ண தொலைக்காட்சி பெட்டி என்றாலே ‘21’ அங்குலம் தொலைக்காட்சி என்று தான் மக்கள் நினைத்தார்கள்.  ஏனெனில், சாதாரணமாக புழக்கத்தில் இருந்தது 21 அங்குலம் தொலைக்காட்சி பெட்டி தான்.

கருணாநிதிக்கு  இந்த திட்டத்தின் மூலம் தன் குடும்பத்திற்கு கிடைக்கும் ஆதாயம் தான் முக்கியம்.  எனவே தான்  மக்களை ஏமாற்றும் விதமாக 14 அங்குலம் வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கினார்.  மக்கள் 21 அங்குலம் தொலைக்காட்சிப் பெட்டி கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், 14 அங்குலம் வண்ண தொலைக்காட்சி பெட்டியை வழங்கினார்.

jayalalitha2006-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னரே இலவச தொலைக்காட்சி பெட்டிக்கு கேபிள் இணைப்பு வேண்டுமே, அதற்கு மாதா மாதம் பணம் கட்ட வேண்டுமே, அதை யார் தருவார்கள் என மக்கள் கேள்விகள் கேட்ட போது, கருணாநிதி “இலவச கேபிள் இணைப்பையும் கொடுத்து தொலைக்கிறேன்” என்று கூறி மக்களை ஏமாற்றினார்.

இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி திட்டமே, தன் குடும்பத்திற்கு வருமானம் சேர்க்கும் திட்டம் தானே? எனவே தான், “ கேபிள் இணைப்பை மறந்து விட்டார் கருணாநிதி. இந்த இலவச தொலைக்காட்சி பெட்டியில் நிகழ்ச்சிகளை பார்க்க பாவம் மக்கள் கேபிள் இணைப்புக்கு மாதா மாதம் அதிக பணம் கட்ட வேண்டியிருந்தது.

கேபிள் தொழிலையே அப்போது ஆட்டிப் படைத்தது கருணாநிதியின் பேரன்கள் தானே?  கேபிள் இணைப்புக்கு பெறப்பட்ட சந்தா தொகை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டியவர்கள் தான் கருணாநிதியின் குடும்பத்தினர்.

2011-ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அரசு கேபிள் டிவி நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக எண்ணிக்கையிலான தொலைக்காட்சி அலைவரிசைகளை வழங்கி வருகிறோம்.

70 லட்சத்திற்கும் மேல் உள்ள சந்தாதாரர்கள் இதனால் பயன் பெற்று வருகின்றனர்.  தற்போது 2016-ஆம் ஆண்டும் கருணாநிதி பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆனால், அவர் மறந்தும் கூட குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி இணைப்பு தொடர்ந்து வழங்கப்படும் என சொல்லவே இல்லை.

தி.மு.க.வினர் வாக்கு சேகரிக்க உங்களை நாடி  வரும் போது, 250 ரூபாய் கேபிள் கட்டணம் செலுத்தவா உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு, அவர்களை விரட்டியடியுங்கள்.

இப்பொழுது நீங்கள் செலுத்துகின்ற கட்டணம் கேபிள் டிவி இணைப்புக்கு மாதம் 70 ரூபாய்.  தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் 250 ரூபாய்.  இதை சொல்லியே நீங்கள் தி.மு.க-வினர் வாக்கு கேட்க வந்தால் துரத்தியடிக்க வேண்டும் என ஜெயலலிதா பேசினார்.