Home Featured இந்தியா பணம் – கார் இல்லாத கேரள முதல்வர் உம்மன் சாண்டி- வேட்புமனுவில் தகவல்!

பணம் – கார் இல்லாத கேரள முதல்வர் உம்மன் சாண்டி- வேட்புமனுவில் தகவல்!

631
0
SHARE
Ad

Oomen chandy immovable propertyதிருவனந்தபுரம் – தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோடிக்கணக்கான சொத்துக்கள் கொண்டவர்களாக இருக்கும் நிலையில், நீண்ட கால அரசியல் நடத்திவரும் – அதிலும் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர் – எந்தவித சொத்துக்களும் இல்லாதவராக இருப்பது இந்தியா முழுவதும் தேடினால் கிடைக்காத ஓர் அதிசயம்தான்.

பதினொன்றாவது முறையாக ஒரே தொகுதியில் போட்டியிடும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் என் கையிருப்பில் பணமே இல்லை – அசையா சொத்துகள், காரும் கிடையாது என்ற சொத்து கணக்கை வெளியிட்டுள்ளார்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதுதான்!

#TamilSchoolmychoice

தமிழ் நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அதே மே 16ஆம் நாளில், கேரள சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ்-முஸ்லிம் லீக் தலைமையிலான கூட்டணியும், ஆட்சியை மீண்டும் பிடிக்க இடதுசாரி இயக்கங்களும் முனைப்பு காட்டி வருகின்றன.

மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைக்க பா.ஜ.க.வும் முயன்று வருகிறது. இதனால், அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.

இருப்பினும், இன்றைய சூழ்நிலையில் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கொண்ட கூட்டணிதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசிநாளான நேற்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பத்துமுறை இதேதொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள உம்மன் சாண்டி, பதினொன்றாவது முறையாக 2016-சட்டமன்றத் தேர்தலிலும் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதையொட்டி, வழக்கமாக செல்லும் தேவாலயம் மற்றும் பெற்றோரின் சமாதிகளுக்கு சென்று பிரார்த்தனை செய்த உம்மன் சாண்டி, தேர்தல் அலுவலர் ஸ்ரீலேகாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவுடன் நேற்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனது கையிருப்பில் பணமே இல்லை என்று கூறியுள்ளார். அவரிடம் சொந்த காரும் இல்லை.

ஆனால், மனைவியிடம் 2010-ஆம் ஆண்டு மாடல் ‘மாருதி ஸ்விப்ட் டிசையர் கார்’ உள்ளது. உம்மன் சாண்டி பெயரில் ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 40 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.32 லட்சம் மற்றும் பிள்ளைகள் பெயரில் ரூ.13 லட்சம் அசையும் சொத்துகளும் உள்ளன.

மனைவியின் ரொக்க கையிருப்பு ரூ. 10,516, தங்க நகைகளின் மதிப்பு ரூ. 8,16,960, வங்கியில் ரொக்க இருப்பு ரூ.10,57,524 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவி பெயரில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன.

உம்மன் சாண்டி பெயரில் அசையா சொத்துகள் ஏதும் இல்லை. 38 கிராம் தங்க நகைகள் மட்டுமே வைத்துள்ளார் உள்ளன. உம்மன் சாண்டியின் 2014-2015-ஆம் நிதியாண்டுக்கான மொத்த வருமானம் ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்து 230 ஆகும். அவருக்கு கடன் எதுவும் இல்லை. வழக்குகளும் நிலுவையில் இல்லை என பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.