கோலாலம்பூர் – திரெங்கானுவில் நிலவி வந்த பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வந்துவிட்டதாக அம்மாநில மந்திரி பெசார் அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எனவே, மக்களின் நல்வாழ்விற்காக தன்னுடன் இணைந்து உழைப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் தயாராகும் படியும் அகமட் ராசிஃப் கேட்டுக் கொண்டுள்ளார்.
“மக்களின் நல்வாழ்விற்காக தொடர்ந்து பணியாற்றுவோம் வாருங்கள், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி முன்னோக்கி வாருங்கள் என உங்களை அழைக்கின்றேன். முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால் நாம் ஒற்றுமையாக ஒரு குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும். நமது சேவையை என்றும் நிலைநாட்ட வேண்டும். நாம் என்ன செய்தாலும் நல்லதையே செய்ய வேண்டும்” என்று அகமட் ராசிஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், திரெங்கானு மந்திரி பெசார் விவகாரம் குறித்து அம்மாநில சுல்தானுடன் தான் கலந்தாலோசித்துவிட்டதாகவும், நடப்பு மந்திரி பெசார் அகமட் ராசிஃபே அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்றும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.