Home Featured உலகம் சிங்கப்பூரில் பயங்கரவாத அமைப்பை உருவாக்கிய 8 வங்கதேசிகள் கைது!

சிங்கப்பூரில் பயங்கரவாத அமைப்பை உருவாக்கிய 8 வங்கதேசிகள் கைது!

840
0
SHARE
Ad

3may-8-bangladeshisசிங்கப்பூர் – சொந்த நாட்டிற்கு சென்று பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த 8 வங்கதேசத் தொழிலாளர்களை உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (ISA) கீழ் கைது செய்துள்ளதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சு இன்று செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

26 வயது முதல் 34 வயதிற்குள் இருக்கும் அவர்கள் 8 பேரும் சிங்கப்பூரில் கட்டுமானம் மற்றும் கடல்சார் நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக்கிலுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து வெளிநாட்டுப் போராளிகளாக இயங்க அவர்கள் முடிவு செய்து, ‘வங்காளதேச ஐஎஸ்’ என்ற குழுவை உருவாக்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

மத்தியக் கிழக்கிற்குப் பயணம் செய்வது கடினம் என்ற காரணத்தால், அவர்கள் சொந்த நாடான வங்காள தேசத்திற்குச் சென்று பயங்கரவாதத்தின் மூலமாக அரசாங்கத்தைக் கவிழ்த்து, ஐஎஸ் அமைப்பை அங்கு நிறுவி, ஈராக் மற்றும் சிரியாவின் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு எனத் தங்களை சுயமாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

அவர்கள் 8 பேரும் கடந்த மாதம் (ஏப்ரல் 2016) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, சிங்கப்பூரில் பணியாற்றி வந்த 27 வங்காளதேசிகள், தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் நாடு கடத்தப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த 8 பேரும், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நேரத்தில், வங்காளதேசத்தில் தாக்குதல் நடத்தியிருக்கக் கூடியவர்கள் என்கிறது சிங்கப்பூர் அமைச்சு.

ஆயுதங்கள், வெடிகுண்டுகள் தயாரிப்பது, வங்காள தேசத்தில் தாக்குதல் நடத்தத் தேவையான நிதியுதவியைப் பெறுவது போன்றவற்றிற்கான ஆவணங்களோடு, கணக்கில்லாத பணமும் அவர்களிடம் இருந்துள்ளது. அவற்றையும் சிங்கப்பூர் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், சிங்கப்பூரில் எஸ்பாஸ் அந்தஸ்தில் பணியாற்றி வந்த கட்டுமானத் தொழிலாளி ரஹ்மான் மிசானுர் (வயது 31) தலைமையில், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் இருந்த மற்ற 7 பேரும் கட்டுமானம் மற்றும் கடல்சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனர்.

“ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக எந்த நேரத்திலும் வெளிநாட்டுப் போராளிகளாக ஐஎஸ்பி (Islamic state of Bangladesh) செயல்படத் தயாராக இருந்த காரணத்தால் சிங்கப்பூரின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்கிறோம்”

“கைது செய்யப்பட்ட அனைவரும் சிங்கப்பூரில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். ஐஎஸ் கட்டளையிட்டால், எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தத் தயார் என்று தான் ரஹ்மான் மிசானுர் கூறியுள்ளதால், சிங்கப்பூர் தான் அவர்களின் இலக்கு என்பது எங்குமே பிரத்யேகக் குறிப்பிடப்படவில்லை” என்று அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், ரஹ்மான் மிசானூரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணம் ஒன்றில், வங்காளதேச அரசாங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள், இராணுவ அதிகாரிகள், ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆகியோரைக் குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டப்பட்டிருந்த தகலையும் சிங்கப்பூர் அமைச்சு வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணியாற்றி வரும் வங்காளதேசிகளை சேர்த்துக் கொண்டு இந்தக் குழுவை இன்னும் பெரிதாக்கவும் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.