சென்னை – இனி கதாநாயகனாக வந்தாலும் நடிப்பேன், நகைச்சுவை நடிகராகவும் நடிப்பேன் என்று விஷாலின் ‘கத்தி சண்டை’ படப்பூஜையில் வடிவேலு தெரிவித்தார். சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘கத்தி சண்டை’.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் தொடங்கியது. விஷால், வடிவேலு, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் படப்பூஜையில் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் பேசிய விஷால், “எனக்கு இன்னொரு பரிமாணத்தை கொடுக்கும் படம் இது.
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ’திமிரு’ படத்தில் இணைந்து, நானும் வடிவேலுவும் வெற்றிபெற்றோம். இந்த படத்தில் மீண்டும் இணைகிறோம். அவரது காமெடியை நானும் ஒரு ரசிகனாக கண்டுகளிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிப்பது குறித்து வடிவேலுவிடம் கேட்டபோது “இனி கதாநாயகனாக வந்தாலும் நடிப்பேன், நகைச்சுவை நடிகராகவும் நடிப்பேன். இனி நிறைய படங்களில் நகைச்சுவை வேடம், படம் முழுக்க வருவது போல இறங்க உள்ளேன். இயக்குநர் சுராஜ் நம்மளுக்கு ஏத்தா மாதிரி தீனி போடுவார். அதனால் நம்பிக்கையோடு நடிக்கிறேன். கண்டிப்பாக வெற்றி பெரும்” என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட சூரி, “ஒரு நல்ல குழுவில் நானும் இருக்கேன். ஏற்கெனவே சுராஜ் இயக்கத்தில் ’அப்பாடக்கர்’ படத்தில் நானும் நடித்தேன். இந்த படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி” என்று தெரிவித்தார். இப்படத்தின் வில்லனாக ஜெகபதி பாபு, ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம். நாதன், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.