புதுடெல்லி – இத்தாலி ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா, மன்மோகன் சிங்கின் பெயர்கள் வெளியானது தொடர்பாக, தீர்ப்பு வழங்கிய நீதிபதி பரபரப்பு பேட்டி அளித்தார்.
இந்திய அதிபர், துணை அதிபர், பிரதமர் போன்ற முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலி நாட்டின் பின்மெக்கானிக்கா குழுமத்தை சேர்ந்த ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ நிறுவனத்திடம் இருந்து உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக்கொண்ட 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு, முந்தைய மன்மோகன் சிங் அரசு 2010–ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த விமான நிறுவனம், இந்திய விமானப்படை தளபதியாக இருந்த எஸ்.பி. தியாகி உள்ளிட்டவர்களுக்கு 10 சதவீத தொகையை கமிஷனாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து 2013–ஆம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்கும் பதிவு செய்தது. ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் இத்தாலி நாட்டிலும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது.
அதை விசாரித்த மிலன் கோர்ட்டு பின்மைக்காவின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி கியூசெப்பி ஒர்சி, ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ முன்னாள் தலைவர் புரூனோ ஸ்பக்னோலினி ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த ஹெலிகாப்டர் பேர ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி ஆகியோரது பெயரை, இடைத்தரகர் ஒருவர் குறிப்பிட்டதாக தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கலாகி உள்ளது.
இத்தாலியில் மிலன் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மார்க்கோ மைக்கோ, தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அந்த செய்தி நிறுவனம் (நியூஸ் எக்ஸ்), ‘‘இந்த ஹெலிகாப்டர் பேர ஊழலில் இந்திய அரசியல் தலைவர்கள் சோனியா காந்தி… மன்மோகன் சிங்… போன்றவர்களின் பெயர்கள் ஏன் வந்தன?’’ என கேள்வி எழுப்பியது.
அதற்கு அவர், ‘‘சோனியா காந்திக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. ஒரு ‘பேக்ஸில்’ அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. வெகு முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்கான ஹெலிகாப்டர்களில் பயணம் செய்பவர்களில் ஒருவராகத்தான் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார். இதேபோன்றுதான் மன்மோகன் சிங்கும்’’ என குறிப்பிட்டார்.
இந்த தகவல்களை காங்கிரஸ் கட்சி ‘டுவிட்டர்’ வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளது. அதில் இந்த தகவல்களை குறிப்பிட்டு, ‘வாய்மையே வெல்லும்’ என கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் போன்றவற்றில் தன் பெயரை இழுக்க பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்வதாகவும், அதற்காக தான் மகிழ்ச்சி அடைவதாகவும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.