கர்நாடக – சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக, கர்நாடக அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 55 கோடி சொத்து குவித்த வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா,சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், சுப்பிரமணியசாமி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
கர்நாடக அரசுத் தரப்பில் வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே 4 நாட்களும், பி.வி. ஆச்சார்யா 5 நாட்களும், சுப்பிரமணியசாமி தரப்பில் இறுதிவாதத்தை ஏற்கெனவே முடித்து விட்டனர்.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரான நாகேஸ்வரராவும் 4 நாட்களாக தமது வாதத்தை முன்வைத்தார். கடந்த 27-ஆம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, தனது வாதத்தை துவங்கினார்.
அவரது வாதம் செவ்வாய்கிழமை காலையுடன் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, கர்நாடக அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா மீண்டும் பதில் வாதத்தை முன்வைத்தார்.
அப்போது ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது என்றும் வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஆச்சார்யா நாளை மே 5-ஆம் தேதி வரை தமது பதில் வாதத்தை தொடருவார் என்றும் அதன் பின்னர் தீர்ப்புத் தேதி அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.