Home Featured நாடு மகாதீருக்கு இனி காவல்துறைப் பாதுகாப்பு கிடையாது!

மகாதீருக்கு இனி காவல்துறைப் பாதுகாப்பு கிடையாது!

649
0
SHARE
Ad

police outridersகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டிற்கு, இனி போக்குவரத்துக் காவல்துறையினரின் பாதுகாப்பு, கோரிக்கையின் அடிப்படையிலே வழங்கப்படவுள்ளது.

இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், “முக்கியமான நிகழ்ச்சிகளின் அடிப்படையிலேயே அவருக்குப் போக்குவரத்துக் காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான பேரணிகளான ஜிஎஸ்டி, பெர்சே உள்ளிட்டவைகளில் அவர் கலந்து கொண்டு வருவதால், அவருக்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், மகாதீருக்கு வழங்கப்பட்டு வந்த யுடிகே (Unit Tindakan Khas) மெய்க்காப்பாளர்களை திரும்பப் பெறப் போவதில்லை என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

இனி மகாதீர் கலந்து கொள்ளும் அரசாங்க நிகழ்ச்சிகளில், போக்குவரத்துக் காவல்துறையின் பாதுகாப்பு தேவை என அவர் தங்களுக்கு கடிதம் அனுப்பினால் மட்டுமே அதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும், அரசாங்கத்திற்கு எதிரான பேரணிகளில் கலந்து கொள்பவருக்கு எதற்கு அரசாங்கம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்? என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மகாதீருக்குப் பாதுகாப்பு அளிக்க யாராவது முன்வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலிட் எச்சரித்துள்ளார்.

“எனக்குத் தெரியும். சிலர் போக்குவரத்துப் பாதுகாப்பு அளிக்க முன்வருகின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று காலிட் அறிவித்துள்ளார்.

காரணம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சாலைப் போக்குவரத்துச் சட்டம் உட்பட மலேசியாவில் போதுமான சட்டம் இருப்பதாகவும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, முறையான பயிற்சிகள் இல்லாமல் யாரேனும் அவருக்கு போக்குவரத்துப் பாதுகாப்பு வழங்கினால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் காலிட் எச்சரித்துள்ளார்.

பெரிய மோட்டார்களை ஓட்டிக் கொண்டு வரும் தனியார் பாதுகாப்பாளர்களின் ‘உத்தரவை’ ஏற்று வாகன மோட்டிகள் யாரும் ஒதுங்கத் தேவையில்லை என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.