சென்னை – “பாரதீய ஜனதா-அ.தி.மு.க. இடையே ரகசிய உடன்பாடு உள்ளது” என சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார்.
சென்னை தீவுத்திடலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்ற பிரமாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இங்கு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இருக்கிறீர்கள்.
இது இந்த கூட்டணி மீது நீங்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பதை காட்டுகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நீங்கள் இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
நீங்கள் எல்லோரும் வரலாறு காணாத பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டீர்கள். பலர் சொத்துக்களை இழந்தீர்கள். பலர் வெள்ளத்தில் சிக்கி, உணவு, குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டீர்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள்.
ஆனாலும் அந்த வெள்ளத்தை எதிர்கொண்டு சமாளித்த உங்களை பாராட்டுகிறேன். ஏனென்றால், தமிழகத்தில் ஆளும் அரசு வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
மக்களே மக்களுக்கு உதவும் நிலைக்கு இந்த அரசு தள்ளிவிட்டது. அந்த கொடுமையான நேரத்தில் இந்த அரசு எங்கே போனது? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியதா? அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க முன் வந்ததா? இல்லை.
2011-ராம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நெசவாளர்களும் கடனில் தத்தளிக்கின்றனர். பாரதீய ஜனதா-அ.தி.மு.க. இடையே ரகசிய உடன்பாடு உள்ளது. ஆகவே எந்த திட்டமும் நிறைவேறவில்லை என சோனியா காந்தி பேசினார்.