விருதுநகர் – அதிமுக தேர்தல் அறிக்கை ‘மம்மி வெளியிட்ட டம்மி’ அறிக்கை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது;- அதிமுகவின் “டம்மி” அறிக்கையை, தேர்தல் அறிக்கையாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பெரும்பாலும் திமுக தேர்தல் அறிக்கையின் நகலாகவே உள்ளது.
மழை வெள்ளத்தின் போது எப்படி தன்னார்வலர்கள் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களில் “ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்”களை ஒட்டி தங்களுடையது என்றார்களோ, அதுபோலவே திமுகவின் தேர்தல் அறிக்கையில் “ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்” ஒட்டப்பட்டு, அதை ஜெயலலிதாவே வெளியிட்டு இருப்பது விசித்திரமானது.
தான் செய்த தவறுகளில் இருந்து, ஜெயலலிதா பாடம் கற்பதாக இல்லை. “நமக்கு நாமே” பயணத்தை போன்றதொரு பயண அனுபவத்தை பெறாத வரையில் அவரால் திமுவின் தேர்தல் அறிக்கைக்கு ஈடானதொரு அறிக்கையை தயாரிக்க முடியாது.
பொதுமக்கள் அளித்த ஆயிரக்கணக்கான கோரிக்கைகள், ஆலோசனைகளில் இருந்து திமுக தேர்தல் அறிக்கை தயாரானது. இதற்கு முன்பாக தான் அளித்த வாக்குறுதிகளையாவது இதுவரை ஜெயலலிதா படித்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.
கிட்டதட்ட 2400 விவசாயிகள் கடன் தொல்லைகளால் தற்கொலை செய்தபோது, முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா. இப்போது விவசாயிகளின் கடனை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.
தவறான நம்பிக்கைகள், பொய்யான வாக்குறுதிகள் ஆகியவற்றை மட்டுமே மூலத்தனமாக கொண்டு பொதுமக்களையும், குறிப்பாக பெண்களை ஏமாற்றி விடலாம் என்று ஜெயலலிதா கனவு காண்கிறார். ஆனால், வளர்ச்சியை முன்னிறுத்தும் புதிய விடியலுக்கான நேரம் வந்து விட்டது என ஸ்டாலின் கூறியுள்ளார்.