சேலம் – ”தி.மு.க.,வுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு, மக்கள் நலனுக்கு வைக்கும் வேட்டு என்பதை மறந்து விடாதீர்கள்,” என, பெருந்துறையில், முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
ஈரோடு, திருப்பூர் மாவட்ட, அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: ‘அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது’ என, கருணாநிதி பொய் பிரசாரம் செய்கிறார்.
அகில இந்திய அளவிலான விலைவாசி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் உள்ளிட்டவைகளால், நாடு முழுவதும் விலை உயர்வு ஏற்படுகிறது.
இந்த கொள்கைகள் அனைத்தும், மத்திய அரசு நிர்ணயிப்பதாக உள்ளது.
இருப்பினும், மக்களை பாதுகாக்க, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, விலைவாசி உயர்வின் தாக்கத்தில் இருந்து, ஏழை – எளிய மக்களை, அ.தி.மு.க., அரசு காப்பாற்றி வருகிறது.
டீசல், பெட்ரோல் விலை உலக அளவில் குறைந்தபோதும், அதன் மீதான கலால் வரியை அதிகரித்து, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு கொள்ளை லாபம் பார்த்து வருகிறது. ஆனால், இதுவரை தமிழக அரசு, அதன் மீதான வரியை உயர்த்தவேஇல்லை.
எனவே, தி.மு.க.,வுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு, மக்கள் நலனுக்கு வைக்கும் வேட்டு என்பதை மறந்துவிடாதீர்கள். ஊழல் கூட்டணியான தி.மு.க., – காங்கிரஸ் அணியினர் ஓட்டு கேட்க வந்தால், விரட்டி அடியுங்கள் என அவர் பேசினார்.