கூச்சிங் – சரவாக்கில் நேற்று காணாமல் போன ஹெலிகாப்டரைத் தேடும் பணியில், இன்று அதன் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, ஒரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.
இந்நிலையில், அது துணையமைச்சர் டத்தோ நோரியா காஸ்னோனின் சடலம் தான் எனத் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது குறித்து மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய வளர்ச்சி அமைச்சரும், டத்தோ நோரியாவின் காஸ்னோனின் உறவினருமான டத்தோ ரோஹானி அப்துல் கரீம் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில், “தற்போது நான் ஐபிகே சரவாக்கில் இருக்கின்றேன். என்னுடைய சகோதரி நோரியாவின் சடலத்தைப் பெறுவதற்காக வந்துள்ளேன். நேற்று நடந்த விபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள முதல் சடலம் அவருடையது தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று காலை தேடுதல் மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் அஸ்மான் ஜுலாய்ஹி வெளியிட்ட தகவலில், பாத்தாங் லூப்பார் ஆற்றுப்படுக்கையில், ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே பெண்ணின் சடலம் கிடைத்துள்ளதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: நன்றி (Malaysiakini)