சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள சில நட்சத்திரத் தொகுதிகளின் வரிசை ஒன்றை பார்ப்போமா?
முதல் நட்சத்திரத் தொகுதியாக நமது கண்களுக்குத் தெரிவது, தமிழகத்தின் முதல்வரும் அதிமுக தலைவருமான ஜெயலலிதா போட்டியிடும் சென்னையிலுள்ள, இராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதிதான்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி
இதற்கு மேலும் இந்தத் தொகுதியின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக சொல்ல வேண்டியதில்லை.
தமிழகத்திலேயே அதிகமான வேட்பாளர்களாக 45 பேர் போட்டியிடும் தொகுதி இது.
மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விசிக சார்பாக ஜெயலலிதாவை எதிர்த்து கல்வியாளரும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்தி தேவி போட்டியிடுகின்றார்.
திமுக சார்பாக இங்கு நிறுத்தப்பட்டிருப்பவர் சிம்லா முத்துசோழன். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணனனின் மருமகளாவார்.
பாமகவும் இங்கு போட்டியிடுகின்றது. அந்தக் கட்சியின் மகளிர் பிரிவு செயலாளர் பி.எக்னஸ் இங்கு போட்டியிடுகின்றார்.
பாஜக சார்பாக இங்கு போட்டியில் குதித்திருப்பவர் எம்.என்.ராஜா. இவர் முன்னாள் அதிமுக பிரமுகரும், அமைச்சருமான அரங்கநாயகத்தின் மருமகனாவார்.
மற்ற வேட்பாளர்கள் சிறு கட்சிகளின் வேட்பாளர்கள் அல்லது சுயேச்சை வேட்பாளர்களாவர்.
வாக்குகள் மற்ற கட்சிகளால் பிரிக்கப்படுவதால் ஜெயலலிதாதான் வெல்வார் – என்ற கணிப்புகள் நிலவுகின்றது. அத்துடன், அதிமுகவின் தலைவர் என்ற முறையில் தொண்டர்களின் வெறித்தனமான களப்பணிகள், முதலமைச்சர் என்ற பிம்பம், மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தால் தொகுதிக்குக் கிடைக்கப் போகும் சலுகைகள்-வசதிகள் ஆகியவை ஜெயலலிதாவுக்கு ஆதரவான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.
எதிர்மறை அம்சங்கள் என்ன?
இருப்பினும், கீழ்க்காணும் அம்சங்கள் ஜெயலலிதாவுக்கு எதிரான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன:
- சென்னை மாநகரில் வெள்ளப் பெருக்கினால், ஆளும் கட்சிக்கு எதிராக குறிப்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக முன்வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள்
- சென்னையில் பொதுவாக திமுகவுக்கு இருக்கும் வாக்கு வங்கி பலம்
- மற்ற கட்சிகள் வாக்குகளைப் பிரிப்பதால் திமுகவுக்கு ஏற்படக் கூடிய சாதகங்கள்
- ஆளும் கட்சிக்கு எதிராக பொதுவாக பொதுத் தேர்தலில் நிலவும் எதிர்மறை வாக்குகள் (anti-incumbency)
-செல்லியல் தொகுப்பு