Home Featured நாடு அரசியல் பார்வை: சரவாக் தேர்தல் முடிவுகள் காட்டுவது என்ன?

அரசியல் பார்வை: சரவாக் தேர்தல் முடிவுகள் காட்டுவது என்ன?

864
0
SHARE
Ad

(நேற்று நடந்து முடிந்த சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அரசில் ரீதியாக உணர்த்தும் பாடங்கள் என்ன? இதன் பாதிப்புகள் மேற்கு மலேசிய அரசியலிலும் எதிரொலிக்குமா? எதிர்க்கட்சிகள் ஏன் தோல்வியைச் சந்தித்தன? செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஓர் அலசல்)

Sarawak - State Assembly seats mapஒருநாடு மூன்று பிரதேசங்கள்! மூன்று வெவ்வேறு விதமான அரசியல் சிந்தனைகளைக் கொண்ட களங்கள்!

இப்படித்தான் விவரிக்கத் தோன்றுகின்றது இன்றைய மலேசிய அரசியலை உற்று நோக்கும்போது! அதையேதான் பிரதிபலிக்கின்றன சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்களும்!

#TamilSchoolmychoice

தீபகற்ப மலேசியா (அல்லது மேற்கு மலேசியா) ஓர் அரசியல் பிரதேசக் களம் என்றால் சரவாக், சபா மற்ற இரு களங்கள். சபா, சரவாக் இரண்டையும் கிழக்கு மலேசியா என்று பூகோள ரீதியாக இணைத்துக் கூறலாமே தவிர, அரசியல் ரீதியாக அவை இணைந்த ஒரே நோக்குடைய அரசியல் சிந்தனை கொண்டவை எனக் கூறிவிட முடியாது. காரணம் அங்கு நிலவும் இருவேறு – இரு துருவ சிந்தனைகள்.

குறிப்பான வித்தியாசம் – சபாவில் அம்னோ உண்டு! சரவாக்கில் அம்னோ இல்லை!

இன்னொரு உதாரணம் – தீபகற்ப மலேசியாவில் இந்தியர்களின் வாக்கு வங்கி அரசியல் முக்கிய அம்சம் என்றால், சபா, சரவாக்கிலோ அப்படி ஓர் அம்சமே அறவே இல்லை. காரணம், மிக மிக சொற்ப இந்திய வாக்குகள்!

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சரவாக், தனித்த அரசியல் சிந்தனைகளின் களமாக உருவெடுத்திருக்கும் மாநிலம் என்பதைத்தான் பிரதிபலிக்கின்றன நேற்றைய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும்!

சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் காட்டுவது என்ன?

adenan-najibமுதலில் சரவாக் மாநிலத்துக்கென தனி அரசியல் வியூகத்தை வகுத்த மாநில மற்றும் தேசிய முன்னணி தலைமைத்துவங்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, சரவாக்கை இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வரும், தற்போதைய மாநில ஆளுநருமான துன் தாயிப் மாஹ்முட் மீதிலான ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிக் கொண்டே போக – அவருக்கும் வயதாக – புதிய மாநில முதல்வராக நியமிக்கப்பட்டவர் அட்னான் சாத்திம்.

இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு, சற்றே உடல் நலம் குன்றியவராக இருந்தாலும், அட்னான், சரவாக் மாநிலத்துக்காக அரசியல் பணியாற்ற முன்வருகின்றேன் எனக் களமிறங்கினார். இவர் தாயிப் முகமட்டின் தங்கையின் கணவர் என்பதிலிருந்து, அந்த மாநிலத்தின் அரசியல் தலைமைத்துவத்தை ஆளும் பார்ட்டி பெசாக்கா பூமிபுத்ரா கட்சியும், தேசிய முன்னணியும் எவ்வளவு இறுக்கமாக தங்களின் கைப்பிடிக்குள் வைத்திருக்கின்றனர் என்பது புலனாகும்.

Adenan Satemசரவாக் மாநிலம் சரவாக் மக்களுக்கே என்ற முழக்கத்தை முதலில் முன்வைத்தார் அட்னான்.

மாநிலத்துக்கு ஒவ்வாத சிந்தனைகளின் சொந்தக்காரர்கள் என்பதால் தீபகற்ப மலேசியாவின் எதிர்க் கட்சிகளின் தலைவர்களுக்கு சரவாக்கில் இடமில்லை என்ற சிந்தனை சரவாக் மக்களிடையே விதைக்கப்பட்டது.

ஒரே நாட்டவர்கள் என்றாலும், மலேசியக் குடியுரிமை பெற்றவர்கள் என்றாலும் – தீபகற்ப மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசையாக சரவாக்கில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறையில் இருக்கும் சூழலில் மற்ற தீபகற்ப எதிர்க்கட்சித் தலைவர்களால் சரவாக்கில் நுழையவும் முடியவில்லை – மாநில அரசியலை முன்னெடுத்துச் செல்லவும் முடியவில்லை.

உள்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்களிடமே சரவாக் தேர்தலை முன்னின்று நடத்தும் மிகப் பெரிய சுமையும், பொறுப்பும் அவர்களின் தோள்களில் சுமத்தப்பட்டது.

இது எதிர்க்கட்சிகள் சந்தித்த ஒரு முக்கிய பின்னடைவாகும்!

எதிர்க் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை

dap-pkrசரவாக் மாநிலத்தில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளுக்கிடையே ஒற்றுமையும், புரிந்துணர்வும் இல்லாமல் போனதும் – குறிப்பாக பக்காத்தான் கூட்டணியின் முக்கிய அங்கங்களான பிகேஆர், ஜசெக கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு காண முடியாத நிலைமை ஏற்பட்டதும் – நடுநிலை அரசியல் பார்வையாளர்களின் கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகின.

ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலிலேயே தொகுதி உடன்பாடுகள் காண முடியாத எதிர்க்கட்சிகள் எவ்வாறு மத்திய அரசாங்கத்தை அமைத்து, ஒற்றுமையாக ஒன்றிணைந்து நாட்டை ஆட்சி செய்யப் போகின்றன என தேசிய முன்னணி தீவிரமாகப் பிரச்சாரம் செய்வதற்கும் ஜசெக-பிகேஆர் இடையிலான அரசியல் சச்சரவுகள் வழி வகுத்தன.

இதன் காரணமாக, பிகேஆர் மூன்று தொகுதிகளை மட்டுமே வென்றிருக்கின்றது. ஜசெகவோ கடந்த தேர்தலில் தான் வைத்திருந்த 12 தொகுதிகளில் 7-இல் மட்டுமே வென்றுள்ளது. எஞ்சிய 5 தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்த 12 தொகுதிகள் அனைத்துமே நகர்ப்புறத் தொகுதிகள் என்பதுடன், சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சட்டமன்றத் தொகுதிகளாகும்.

உள்நாட்டு டயாக் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 17 தொகுதிகளிலும் ஜசெக போட்டியிட்டது. மலாய்-மெலானாவ் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு தொகுதியிலும் அது மலாய் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தது.

அட்னானின் மத நல்லிணக்க அணுகுமுறை

Logo-BNபதவியேற்றது முதல், தான் ஒரு வித்தியாசமான, நியாயமான, நடுநிலையான தலைவர் என்பதைக் காட்டிக் கொள்ள முற்பட்டார் அட்னான்.

கிறிஸ்துவர்களுக்கும் முன்னுரிமை – முஸ்லீம் சரவாக்கின் அதிகாரபூர்வ மதமல்ல என்ற அறிவிப்பு – சர்ச்சைக்குரிய கிறிஸ்துவ மத மாற்றம் குறித்த வழக்கொன்று மாநில அரசாங்கத்தால் மீட்டுக் கொள்ளப்பட்டது – இப்படியாக யாருமே எதிர்பாராத பல்வேறு அதிரடி அஸ்திரங்களை இந்தத் தேர்தலில் பிரயோகித்தார் அட்னான்.

சீன வாக்குகளைக் கவர, ஆளும் தேசிய முன்னணி சார்பில் மிகப் பெரிய சீனப் பணக்காரர்களும், அவர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்களும் அவர்களின் செல்வாக்கு மிக்க பகுதிகளில் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டனர்.

தேசிய முன்னணியின் சரவாக் மாநிலக் கூட்டணிக் கட்சிகளிடையே புரையோடிப் போயிருந்த அரசியல் பூசல்களை சமாளிக்க, கட்சி சார்பற்ற நேரடி தேசிய முன்னணி வேட்பாளர்கள் என்ற புதிய வியூகத்தை வகுத்து செயல்படுத்தினார் அட்னான்.

இவையெல்லாம் சரவாக் மக்களின் மனங்களில்-  நமக்கென – நமது மாநில நலன்களை மட்டுமே முன்வைத்துப் போராடும் – மத்திய அரசாங்கத்திற்கு ஒத்து ஊதாத ஒரு சிறந்த தலைவர் கிடைத்து விட்டார் – என்ற எண்ணத்தை விதைத்தன. அந்த எண்ணங்கள்தான் நேற்றைய தேர்தல் முடிவுகளிலும்  பிரதிபலித்தன.

நஜிப் முன்னிலைப்படுத்தப்படவில்லை

Najib-அடுத்த வியூகமாக 1எம்டிபி பிரச்சனையால் பூதாகாரமாக உருவெடுத்திருக்கும் நஜிப்புக்கு எதிரான எதிர்ப்பு அலைகள் காரணமாக – அவரது முகமும், அவரை முன்னிறுத்தும் பிரச்சாரங்களும் வெகுவாகக் குறைக்கப்பட்டன. பிரதமர் என்ற முறையில் சரவாக்கின் வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்க மட்டுமே நஜிப் பயன்படுத்தப்பட்டார்.

அப்படியே, நஜிப்பை முன்னிறுத்தி இருந்தாலும், சரவாக்கின் வாக்காளர்கள் 1எம்டிபி விவகாரத்தின் நுணுக்கங்களை, பொருளாதார, நிதி நிலமைகளை ஆய்ந்து கணிக்கும் வல்லமை படைத்தவர்களும் அல்ல. அவர்களின் பிரச்சனைகளும், அவர்களின் சிக்கல்களும் வேறானவை. இதனாலும், 1எம்டிபி பிரச்சனை தீபகற்ப மலேசியா அளவுக்கு சரவாக்கில் எதிர்மறை விளைவுகளைத் தோற்றுவிக்கவில்லை.

இவையெல்லாம் சாதகமாக இருந்தும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கடுமையான நெருக்கடிகள் அமுல்படுத்தப்பட்டன. தீபகற்ப எதிர்க்கட்சித் தலைவர்கள் சரவாக்கில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது ஒரு புறமிருக்க,

சில உட்புறப் பகுதிகளில் நீண்ட வீடுகளில் தங்கியிருந்த வாக்காளர்களைச் சந்திக்கச் செல்லும்போது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அங்கு செல்வதற்கான ஒரே போக்குவரத்தான ஆற்றுப் படகு சேவைகள் மறுக்கப்பட்டன என்று கூட சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியாயமான ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், அரசியல் வெளிப்படைத் தன்மை, நேர்மை இப்படி பல்வேறு முனைகளில் சமரசம் செய்துகொள்ளப்பட்ட வெற்றியாகத்தான் சரவாக் தேசிய முன்னணி வெற்றியைப் பார்க்க முடியும்.

அடுத்த கட்டம் என்ன?

அட்னானுக்கு இதுவே கடைசித் தவணை என்பதாலும், அவரது வயது, உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இனி, அவருக்கு அடுத்த புதிய தலைவர் ஒருவர் அடையாளம் காணப்படுவார். சரவாக் அரசியலில் முன்னிறுத்தப்படுவார்.

அவர் யார் என்பது, அநேகமான அடுத்த துணை முதலமைச்சராக நியமிக்கப்படப் போகிறவர் யார் என்பதிலிருந்து கண்டுபிடித்து விடலாம்.

அடுத்து, சரவாக் மாநிலத்தின் 32 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மையானவற்றைக் கைப்பற்ற, இனி தேசிய முன்னணி தலைமைத்துவம் வியூகம் வகுக்கும்.

அடுத்த பொதுத் தேர்தலில், தீபகற்ப மலேசியாவில் அம்னோவும், தேசிய முன்னணியும் பெரும் பின்னடைவைச் சந்திக்கலாம் என்ற சூழ்நிலையில், சரவாக்கில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளை தேசிய முன்னணி வென்றெடுக்கப் போகின்றது என்பது அடுத்த மத்திய அரசாங்கத்தை அது மீண்டும் அமைக்குமா என்பதை நிர்ணயிக்கப் போகும் ஒரு முக்கியமான கணக்கெடுப்பாகும்.

இனி சரவாக் மாநிலத்தை மையமிட்டிருந்த மலேசிய அரசியல் அங்கிருந்து மெல்ல விலகி இனி தீபகற்ப மலேசியா நோக்கி நகரும்!

சரவாக் ஹெலிகாப்டர் விபத்தால் காலியாகியுள்ள கோலகங்சார் (பேராக்), சுங்கை பெசார் (சிலாங்கூர்) ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களை நோக்கி மலேசிய அரசியல் இனி மையமிட்டிருக்கும்!

-இரா.முத்தரசன்