தூத்துக்குடி – தமிழ்நாட்டுத் தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் எங்கும் ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணங்களைக் கைப்பற்றி வருகின்றனர். நேற்று சனிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே சரத்குமார் காரிலிருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ. 9 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் அதிமுக கூட்டணி வேட்பாளராக திருச்செந்தூர் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழகம் முழுவதும் சென்று அதிமுக வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வரும் சரத்குமார், வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து விட்டு நள்ளிரவில் திருச்செந்தூருக்கு தனது காரில் திரும்பினார்.
அவருடன் உதவியாளர்கள் 2 பேர் இருந்துள்ளனர். அப்போது, ஆறுமுகனேரி அருகில் நல்லூர் விலக்கில் காணொளி (விடியோ) புகைப்படக் கருவியுடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த வழியே வந்த சரத்குமார் காரை மறித்து சோதனையிட்டபோது முதலில் ரூ. 7.50 லட்சமும், மீண்டும் சோதனையிட்டபோது மேலும் ரூ. 1.50 லட்சமும் என மொத்தம் ரூ. 9 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தை தனது உணவு மற்றும் கார் செலவு தேவைகளுக்காக வங்கியிலிருந்து எடுத்து வைத்துள்ளேன் என சரத்குமார் கூறியிருக்கின்றார். இதற்கான ஆவணங்களை விரைவில் சமர்ப்பிக்கிறேன் என்றும் சரத்குமார் கூறியிருந்தாலும், இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தப் பணம் வேட்பாளரிடம் இருந்து நேரடியாகக் கைப்பற்றப்பட்ட பணம் என்பதால் மீண்டும் சரத்குமாரிடம் அது ஒப்படைக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.