சுபாங் ஜெயா – கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த தோட்ட மற்றும் மூலத் தொழில் அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் சுந்தரன் அண்ணாமலையின் இறுதிச் சடங்கில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இன்று கலந்து கொண்டு, அவரது நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
அவருடன் கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதனும் கலந்து கொண்டு தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார்.
மலேசியப் பொருளாதாரத்திற்கும் குறிப்பாக இந்திய சமூகத்திற்கும் டாக்டர் சுந்தரன் ஆற்றி வந்துள்ள சேவைகளையும் டாக்டர் சுப்ரா நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
“டாக்டர் சுந்தரனின் மறைவு நாட்டுக்கு மட்டும் இழப்பில்லை. எனக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. காரணம் உலக வங்கியில் பணியாற்றி வந்த காலகட்டம் முதல் அவர் எனக்கு நெருங்கிய நண்பராக விளங்கினார்” என்றும் சுப்ரா நினைவு கூர்ந்தார்.
ஒரு பொருளாதார நிபுணரான டாக்டர் சுந்தரன் மலேசியா தந்த சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர் என்பதோடு, இந்த வட்டாரத்தின் சந்தைகளை நன்கு அறிந்தவருமாவார் என அனைத்துத் தரப்பினராலும் சிறப்பித்துக் கூறப்படுகின்றார்.
இன்று சுபாங் ஜெயாவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் திரளான பொதுமக்களும், நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டு, தங்களின் அஞ்சலியை அவருக்குச் செலுத்தினர்.