சென்னை – சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறை செல்வார் என்றும், சசிகலாதான் முதல்வராகும் நிலை வரும் என்பதால் அதிமுகவுக்கு வாக்களித்து ஓட்டுகளை வீண் செய்ய வேண்டாம் என்றும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்தார்.
சென்னை அடுத்த, ஸ்ரீபெரும்புதூரில் பாஜக வேட்பாளர், மனோகரனை ஆதரித்து சுப்பிரமணியன் சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: ஜெயலலிதா அரசியலுக்கு வரும்போது, அவருக்கு ஒரு ரூபாய்கூட சொத்து கிடையாது.
ஆனால், ரூ.120 கோடி சொத்து இருப்பதாக தற்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா தண்டனை பெறுவார். எனவே, அவர் முதல்வராக முடியாது.
அதிமுக வெற்றி பெற்றாலும், சசிகலாதான் முதல்வர் ஆவார். எனவே, அதிமுகவுக்கு வாக்களிப்பது வீண் வேலை. ஏழை, எளியவர்களுக்கு தேவையானது அடிப்படை வசதிகள்.
அதை செய்து தராமல் மக்களின் வரிப்பணத்தில் இருந்தே தொலைக்காட்சி, இரு சக்கர வண்டி என இலவசமாக வழங்குகின்றனர். தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம், அம்மா பள்ளிக்கூடம் போன்று, விரைவில் அம்மாவுக்கு ஜெயிலும் வரும். சசிகலா தேவர் சமுதாயத்தை பயன்படுத்தி அரசியல் செய்து வருகிறார்.
தேவர், எனது சொத்து நாட்டுக்கு என்றார். ஆனால், சசிகலாவோ, நாட்டின் சொத்து எல்லாம் எனக்கு எனும் கொள்கை உள்ளவர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட தி.மு.க.வினர் விரைவில் தண்டனை அனுபவிக்க போகிறார்கள். அதேபோல், ‘அகஸ்டா ஹெலிகாப்டர்’ ஊழல் வழக்கில் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் தண்டனை வாங்கிக் கொடுப்போம் என சுப்பிரமணியன் சாமி தெரிவித்தார்.