Home Featured வணிகம் மலேசிய மின்சார வாரியம் இந்தியாவில் 1,200 மில்லியன் ரிங்கிட் முதலீடு!

மலேசிய மின்சார வாரியம் இந்தியாவில் 1,200 மில்லியன் ரிங்கிட் முதலீடு!

1110
0
SHARE
Ad

TNB-Logoகோலாலம்பூர் – மலேசியாவின் அரசாங்க உடமையான தேசிய மின்சார வாரியம் (டிஎன்பி), இந்தியாவின் மிகப்பெரிய கட்டமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஜிஎம்ஆர் எனெர்ஜி (GMR Energy Ltd) நிறுவனத்தில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தி 30 சதவீத பங்குகளை வாங்குவதன் மூலம் மிகப் பெரிய முதலீட்டை இந்தியாவில் செய்திருக்கின்றது.

மலேசிய ரிங்கிட் மதிப்பில் இது ஏறத்தாழ 1,200 மில்லியனாகும்.

ஜிஎம்ஆர் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் (GMR Infrastructure Ltd) என்பது இந்தியாவின் மிகப் பெரிய பல்முனை வணிக நிறுவனங்களுள் ஒன்றாகும். இதன் துணை நிறுவனம்தான் ஜிஎம்ஆர் எனெர்ஜி என்ற மின்ஆற்றல் உற்பத்தி நிறுவனமாகும்.

#TamilSchoolmychoice

அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்துலக அளவில் தனது முதலீடுகளையும், மின் ஆற்றல் உற்பத்தியையும், விரிவாக்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாகவும், அதன் ஒரு பகுதியே இந்த முதலீடு என்றும் தேசிய மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஜிஎம்ஆர் எனெர்ஜி நிறுவனத்தில் 30 சதவீதப் பங்குகளை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் மின்சார வாரியம் கையெழுத்திட்டுள்ளது என பங்குச் சந்தைக்கு விடுத்திருக்கும் அறிவிப்பில் மின்சார வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.

ஜிஎம்ஆர் எனெர்ஜி இந்தியாவில் நிலக்கரி, எரிவாயு, நீர்சக்தி ஆகியவை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பல்வேறு திட்டங்களுக்கான அனுமதியைப் பெற்றுள்ளது. இதில் பல திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் செயல்பட்டு வருவதோடு, 2,330 மெகாவாட் மின்சார உற்பத்தியை தற்போது அது முழுமையாகக் கொண்டுள்ளது.

ஜிஎம்ஆர் மூலமாக இந்தியாவில் பல்வேறு மின்திட்டங்களில் தேசிய மின்சார வாரியம் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.