திருவனந்தபுரம் – இந்தியாதான் என் நாடு. என் கடைசி மூச்சு வரை இந்தியாவில்தான் இருப்பேன். என் அஸ்தியும் இங்குதான் கரையும், என்று உருக்கமாகப் பேசினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: இப்போது நான் பேசுவது அரசியல் அல்ல; என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி கூறி வரும் கருத்துக்கு பதில் கூற விரும்புகிறேன்.
என்னை இத்தாலிக்காரர் என மோடி அடிக்கடி கூறுகிறார். ஆம், நான் பிறந்தது இத்தாலியில்தான். எனக்கு அங்கே 93 வயதில் தாய் இருக்கிறார். இதை நான் மறைக்கவில்லை.
ஆனால், 1968-இல் என்றைக்கு இந்திரா காந்தியின் மருமகளாக இந்தியாவுக்கு வந்தேனோ அன்றிலிருந்து இன்று வரை இந்தியப் பெண்ணாகவே வாழ்ந்து வருகிறேன். ஏறத்தாழ 48 ஆண்டுகளாக இங்கு வாழும் எனக்கு நாடு மட்டும் அல்ல வீடும் கூட இந்தியாதான்.
இங்குதான் எனது அன்பார்ந்தவர்கள் இருக்கிறார்கள். இங்குதான் எனது கடைசி மூச்சு வரை இருப்பேன். எனது அஸ்தியும் உங்கள் மத்தியில்தான் கரையும். பிரதமர் நரேந்திர மோடி இத்தனை தரம் தாழ்ந்து பேசுவார் என நினைக்கவில்லை.
தனிப்பட்ட முறையில் ஒருவரை விமர்சிப்பது பிரதமர் மோடிக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. எனது உணர்வுகளை பிரதமர் மோடி புரிந்துகொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. மக்கள் எனது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.
ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக பாஜகவும் பிரதமர் மோடியும் சோனியா காந்தியை இத்தாலியுடன் தொடர்புபடுத்தி கிண்டலடித்து வருவதற்கு பதிலடியாக சோனியா காந்தி பேசியுள்ளார்.