சென்னை: திமுக ஆட்சி அமைத்த பின்னர், இயற்கையாக எனக்கு ஏதாவது நேரிட்டால் எனக்குப் பிறகு ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆனால், திமுக வெற்றி பெற்றால் முதலமைச்சராகப் பதவி ஏற்கப் போவது நான்தான் என்றும் கருணாநிதி அறிவித்துள்ளார்.
செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டி
என்.டி.டி.வி ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்துள்ள பேட்டியில், நடைபெறவிருக்கும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், 6-வது முறையாக முதல்வராக பதவி ஏற்பேன் என்று கூறியிருக்கின்றார்.
“மேலும், இயற்கையாக எனக்கு ஏதாவது நேரிட்டால் எனக்குப் பிறகு ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார்” என்றும் கருணாநிதி கூறினார்.
மிகப் பெரிய பாரம்பரியமும், வரலாறும் கொண்ட திமுகவை ஒரு குடும்பக் கட்சியாக சுருக்கி விட்டார் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அதற்கெல்லாம் மசியாது தொடர்ந்து தனது மகன்களையும், மகளையும்தான் திமுகவில் முன் நிறுத்தி அரசியல் நடத்தி வருகின்றார் கருணாநிதி.
நமக்கு நாமே வெற்றிப் பயணம் முடிந்து திரும்பி வந்தபோது ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறும் கலைஞர்….
இந்தத் தேர்தலில் ஒரு பக்கம் ஸ்டாலின் பிரச்சாரம் என்றால், இன்னொரு பக்கம் திமுகவின் பிரச்சார பீரங்கி என்பது போல் அடிக்கடி முகம் காட்டுவது கருணாநிதியின் மகளான கனிமொழிதான்!
இதனைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை கோடி புதிய வாக்காளர்கள், அதிலும் இளம் வாக்காளர்கள் கருணாநிதியின் தலைமைத்துவத்தை ஆதரித்து வாக்களிக்க முன்வருவார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழத் தொடங்கியுள்ளது.
93வது வயதில் மீண்டும் முதல்வராக கருணாநிதி ஆசைப்பட்டாலும், மக்கள் அவ்வாறு ஆசைப்படுகிறார்களா என்பது தெரியவில்லை.
புதிய வாக்காளர்களும், பெரும்பான்மை நடுத்தர வயது – படித்த வாக்காளர்களும் விரும்புவது நரேந்திர மோடி போன்ற சுறுசுறுப்பான, ஓடி ஆடி வேலை செய்யக் கூடிய ஒரு முதல்வரைத்தான்.
அந்த வகையில் மக்கள் சந்திப்பு என்ற அம்சத்தில் ஜெயலலிதாவை விட மு.க.ஸ்டாலின் இந்த சட்டமன்றத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு முன்னணி வகித்து வருகின்றார்.
ஏற்கனவே, ‘நமக்கு நாமே’ பயணம் போனவர், இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் காலையிலேயே நடைப் பயிற்சி என்ற பெயரில் சந்தைகளுக்கும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கும் சென்று அவர்களைச் சந்தித்துக் கைகுலுக்குகின்றார். அளவளாவுகின்றார்.
மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சோ –கூட சில மாதங்களுக்கு முன்னால், “ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக கருணாநிதி முன்னிறுத்தினால் திமுகவுக்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் அதிகள்” எனக் கூறியிருந்தார்.
பாஜகவின் அதிரடித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூட, ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் என்றால் பாஜக கூட்டணி அமைக்கலாம் என்ற ரீதியில் கருத்துரைத்திருந்தார்.
ஸ்டாலில் முதல்வர் என்றால் ஆதரவு கூடியிருக்கலாம்
இந்த சூழ்நிலையில், திமுக வென்றால் ஸ்டாலின் முதல்வராவார் – நான் பின்னணியில் இருந்து எனது அனுவப ரீதியான ஆலோசனைகளைக் கூறி தமிழக அரசை வழிநடத்துவேன் – என்று கலைஞர் கூறியிருந்தால் அதன் மூலம் மக்கள் மனங்களில் கலைஞர் மீதான மதிப்பும் உயர்ந்திருக்கும், திமுகவுக்கான வெற்றி வாய்ப்பும் கூடியிருக்கும்.
கலைஞரைப் பார்த்தாகி விட்டது, ஜெயலலிதாவைப் பார்த்தாகி விட்டது, இனி ஸ்டாலின் எப்படி செயல்படுகின்றார் என்றுதான் பார்ப்போமே என்ற சிந்தனையும் மக்களிடையே தோன்றியிருக்கும்.
காங்கிரஸ் கூட்டணியுடனான பேச்சு வார்த்தையின்போது ஸ்டாலின்…
ஆனால் அப்படி கூறாது, எனக்குப் பிறகுதான் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார் என கருணாநிதி கூறியிருப்பது வாக்களிப்பு நெருங்கி வரும் இந்த சமயத்தில் திமுகவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது.
அப்படி எதுவும் கூறாமல் விட்டிருந்தால் கூட, திமுக வென்றால் ஒருக்கால் ஸ்டாலின் நேரடியாக முதல்வர் பதவி ஏற்பார் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
கலைஞரின் அறிவிப்பு ஸ்டாலினுக்கான முடிசூட்டலை உறுதிப்படுத்துகிறது என்றாலும், கலைஞர் உடல் நலம் இருக்கும் நிலையில் அவரே மீண்டும் முதல்வராக வேண்டும் என மக்கள் யாரும் விரும்புவதாகத் தெரியவில்லை – அவர்களின் கட்சிக்காரர்களையும், ஆதரவாளர்களையும் தவிர!
கலைஞருக்கு இருக்கின்ற பின்னடைவுகள்
கலைஞர் சுறுசுறுப்பாக இருக்கின்றார் – தெளிவாக சிந்திக்கின்றார் – என்றெல்லாம் திமுகவினர் தொடர்ந்து கூறி வந்தாலும், தொலைக்காட்சி செய்திகள் அவரது உண்மையான நிலைமையை தெளிவாக மக்களுக்கு எடுத்துக் காட்டி வருகின்றது.
93வது வயதில் அவர் பேச்சில் குழறல் தெரிகின்றது. சில சமயங்களில் பேசும் போது சிந்தனைத் தொடர்பு அறுபடுகின்றது. இவையெல்லாம் தள்ளாத முதுமையின் அறிகுறிகள்தான் என்றாலும், இவற்றோடு அவரை முதல்வராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இன்றைய இளைய தலைமுறையின் நவீன சிந்தனை யுகத்தில் எடுபடுமா?
கலைஞர் முதல்வராகி விட்டால் இப்படியே தள்ளுவண்டியில் அவரை வைத்துக் கொண்டு, மற்றவர்கள் ஆட்டம் போடுவார்கள் – குடும்பத்தினரின் ஊடுருவல்கள் , ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற அச்சமும் மக்களை விட்டு விலகியபாடில்லை.
கடந்த முறை, கலைஞர் குடும்பத்தினரின் – கலைஞருக்கு நெருக்கமான திமுக தலைவர்கள் – நடத்திய அட்டகாசங்கள்தான் திமுவைத் தோற்கடித்தது என்பதையும் நாம் மறந்து விட முடியாது.
இந்த சூழலில்தான் மீண்டும் நானே முதல்வர் – எனக்குப் பிறகுதான் ஸ்டாலின் என்றால் – இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படியே? என்ற கேள்வியையும் வாக்காளர்கள் மனங்களில் இந்த அறிவிப்பு விதைக்கின்றது.
இதனால்தான் மாநிலம் முழுவதும் சுற்றி வந்து ஆணித்தரமாகவும், உறுதியுடனும் உரையாற்றும் ஜெயலலிதான் தீர்க்கமான முடிவெடுக்கக் கூடிய துணிச்சலான முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்படுகின்றார். கலைஞரை விட வெற்றி வாய்ப்பு கூடுதலாகக் கொண்டவராகப் பார்க்கப்படுகின்றார்.
அண்மைய கருத்துக் கணிப்புகளும் இதையேதான் தெரிவிக்கின்றன.
-இரா.முத்தரசன்