வாஷிங்டன் – இந்த ஆண்டுடன் தனது எட்டாண்டு கால அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் ஒபாமா அதற்கு முன்பாக சில சாதனைகளையும் செய்துவிட்டுச் செல்கின்றார்.
நடப்பு அமெரிக்க அதிபர் ஒருவர் கியூபாவுக்கு முதல் தடவையாகச் செல்லும் சாதனையைப் புரிந்த ஒபாமா இப்போது அடுத்த சாதனையைப் புரிகின்றார்.
இரண்டாம் உலகப் போரின்போது, 1945ஆம் ஆண்டில், அமெரிக்கா முதலில் ஹீரோஷிமாவிலும் பின்னர் நாகாசாக்கியிலும், அணுகுண்டு போட்டு ஜப்பானுக்கு பெரும் அழிவையும் – நீங்காத வடுக்களாக பல நினைவுகளையும் – ஏற்படுத்தியிருக்கிறது.
உலகம் என்றும் மறக்காத காட்சி – ஹீரோஷிமாவில் அணுகுண்டு வெடித்தபோது…
இந்நிலையில், பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர்கள் யாரும் அணுகுண்டு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹீரோஷிமா, நாகாசாக்கி நகர்களுக்கு சென்றதில்லை.
அந்த வகையில் எதிர்வரும் மே 27ஆம் தேதி தனது ஜப்பான் வருகையின் போது, ஹீரோஷிமா நகருக்கு வருகை தருவதன் மூலம் அமெரிக்காவின் அணுகுண்டால் பாதிக்கப்பட்ட அந்நகருக்கு வருகை தரும், முதல் பதவி வகிக்கும் அதிபராக ஒபாமா திகழ்வார்.
கடந்த 70 ஆண்டுகளில் எந்த அமெரிக்க அதிபரும் அணுகுண்டால் தாக்கப்பட்ட இந்த நகர்களுக்குச் சென்றதில்லை.
மே 21 முதல் 28 வரை வியட்னாம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஒபாமா பயணம் மேற்கொள்வார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.