Home 13வது பொதுத் தேர்தல் கெராக்கான் சார்பில் இரண்டு இந்தியர்கள் நாடாளுமன்றத்திற்குப் போட்டி

கெராக்கான் சார்பில் இரண்டு இந்தியர்கள் நாடாளுமன்றத்திற்குப் போட்டி

668
0
SHARE
Ad

மார்ச் 17 – எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் முதன் முறையாக கெராக்கான் கட்சியின் சார்பாக இரண்டு இந்தியர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய முன்னணியின் சார்பாக இந்திய வேட்பாளர்கள் என்றால் பல ஆண்டுகளாக ம.இ.கா சார்பாகத்தான் இந்தியர்கள் நிறுத்தப்பட்டு வந்துள்ளனர்.

ஆனால் 2004ஆம் ஆண்டில் பிபிபி கட்சித் தலைவரான கேவியஸ் தைப்பிங் நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்டு வென்று ம.இ.காவிற்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய முன்னணியின் இந்திய வேட்பாளராக விளங்கினார்.

#TamilSchoolmychoice

இருந்தாலும் 2008 பொதுத் தேர்தலில் அவர் அதே தைப்பிங் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வியடைந்தார்.

கெராக்கான் கட்சியில் நீண்ட நாளாக இந்தியர்களின் பங்களிப்பு இருந்து வந்தாலும் அந்த கட்சியின் சார்பாக இந்தியர்கள் நாடாளுமன்றத்திற்கு நிறுத்தப்படுவது அபூர்வமாகவே நிகழ்ந்து வந்தது.

ஒரு தவணை மட்டும் கெராக்கானின் உதவித் தலைவராக இருந்த வழக்கறிஞர் டொமினிக் புதுச்சேரி பினாங்கில் நிபோங் திபால் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வென்றார்.

கோகிலன் பிள்ளை பிரவேசம்

Kohilan-Sliderகடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கெராக்கான் சார்பாக இந்திய வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படாதது குறித்து சர்ச்சைகள் எழுந்தபோது கெராக்கான் தலைவர் கோ சூ கூன் தகுதி வாய்ந்த இந்திய வேட்பாளர்கள் யாரும் கெராக்கானில் இல்லை என்று கூறி அதனால் பலரது கண்டனங்களுக்கும் ஆளானார்.

2008 பொதுத் தேர்தலில் கெராக்கான் பலத்த அடி வாங்க, அதன் பலஇன கட்சி என்ற தோற்றமும் நொறுங்கிப் போனது. அதைத் தொடர்ந்து, கெராக்கானின் சார்பாக கோகிலன் பிள்ளை செனட்டராக நியமிக்கப்பட்டு வெளியுறவுத் துறை துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்த முறை கோகிலன் பிள்ளை பூச்சோங் அல்லது பத்து கவான் நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றில் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அநேகமாக பூச்சோங் தொகுதியில் கர்ப்பால் சிங்கின் புதல்வர் கோபிந்த் சிங்கை எதிர்த்து கெராக்கான் சார்பாக கோகிலன் பிள்ளை நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சிகாம்புட் தொகுதியில் வழக்கறிஞர் ஜெயந்தி?

கூட்டரசுப் பிரதேசத்தின் நாடாளுமன்றதொகுதிகளில் ஒன்றான சிகாம்புட் தொகுதியில் கடந்த ஆண்டில் ஜ.செ.கவின் லிம் லிப் எங் 7,732 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இந்த முறை இங்கு கெராக்கான் கட்சியின் சார்பாக தேசிய முன்னணி வேட்பாளராக வழக்கறிஞர் ஜெயந்தி தேவி பாலகுரு (படம்)  இங்கு நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சிகாம்புட் தொகுதியின் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயந்தி இந்த தொகுதியைச் சுற்றி வந்து பல பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்த்து வைத்திருப்பதோடு, தொடர்ந்து பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வாக்காளர்களைச் சந்தித்து வருகின்றார்.

இதனைத் தொடர்ந்து, இந்த முறை கெராக்கான் கட்சியின் சார்பாக இரண்டு இந்திய வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்கு நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிபிபி கட்சி சார்பிலும் கேவியஸ் அல்லது மற்றொரு இந்திய வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் ம.இ.காவின் ஒன்பது வேட்பாளர்கள்  தவிர்த்து, மூன்று இந்திய வேட்பாளர்கள் தேசிய முன்னணி சார்பாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற இடங்களுக்குப்  போட்டியிடுவார்கள்.