சென்னை – நான் 92 வயதிலும் ஹெலிகாப்டரில் பறந்து சென்று வாக்கு சேகரிக்கவில்லை என்று கருணாநிதி தெரிவித்து உள்ளார். இது குறித்து தி.மு.க. கருணாநிதி கூறியுள்ளதாவது,
”கடந்த சில நாட்களாக தமிழக நாளேடுகளை பிரித்துப் பார்த்தால், ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு பணம் கொழிக்கும் மாநிலமாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழும் அளவுக்கு, அங்கே இத்தனை லட்சம் ரூபாய், இங்கே இத்தனை கோடி ரூபாய் பறிமுதல், வாக்காளர்களுக்குத் தங்குதடையின்றிப் பணம் பட்டுவாடா, மின்சாரத்தை நிறுத்திவிட்டு இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு பணம் விநியோகம் என்றெல்லாம் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
அ.தி.மு.க.வினர் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு புது உத்தியைப் பண விநியோகத்திற்குக் கண்டு பிடித்து, நமது இந்திய ஜனநாயகத் தேர்தலைச் செழுமைப்படுத்தி வருகின்றனர்.
2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்துடன் கை கோர்த்துக் கொண்டு கடைசிநேரத்தில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து, அதைப் பயன்படுத்தி, காவல் துறையினர் துணையுடன் பணப் பட்டுவாடா செய்தனர்.
இந்தத் தேர்தலில், மின் விநியோகத்தை நிறுத்திவிட்டு, அந்த இருளைப் பயன்படுத்தி, பல இடங்களில் பண விநியோகம் செய்திருக்கின்றனர். ஆளும் அ.தி.மு.க.வினர் தாங்கள் வாக்காளர்களின் அதிருப்தியையும், கோபத்தையும் கடந்து இனியும் வெற்றி பெற முடியாது என்று கடைசியாக கொள்ளையடித்த பணத்தைக் கத்தை கத்தையாக அள்ளி வீசுகிறார்கள் என்றும் செய்திகள் வருகின்றன.
தேர்தல் நேரத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு, சுமார் நூறு கோடி ரூபாய் கைப்பற்றப்படவில்லை. எனக்கு வயது 92. இந்த வயதிலும் உங்களை நேரில் சந்தித்து உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுவருகிறேன். தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சிலரைப் போல ஹெலிகாப்டரில் நான் பறந்து செல்லவில்லை; வாக்காளர்களை, தனக்கு வசதியான ஓரிடத்தில், கடும் வெயிலில் கூட்டி வைத்து, வாக்கு கேட்க எனக்குத் தெரியாது. வாக்காளர்களைத் தேடி, அவர்கள் இருக்கும் இடத்திற்கே போவது தான் என் வழக்கம்.
பிரச்சார வாகனத்தில் சாலை வழியே பல நூறு மைல் பயணம்; புகைவண்டிப் பயணம்; பயணிகள் விமானத்தில் பயணம் எனத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் பிரத்தியேகமான பயண ஏற்பாடு எதையும் செய்து கொள்ளவில்லை. நான் மிக மிகச் சாதாரண, சாமானியன் என்பதால், சிலரைப் போல ஆடம்பர எண்ணமே எனக்கு எழுவதில்லை.
சிலரைப் போல, “வானத்தை வில்லாக வளைத்து விட்டேன்; மணலைக் கயிறாகத் திரித்து விட்டேன்; தமிழகத்தில் வசந்தம் வீசுகிறது; எனக்கு வாக்களித்தால் கற்பனைக்கெட்டாத உயரத்திற்கு மக்களைக் கொண்டு செல்வேன்’’ என்று திரும்பத் திரும்பப் புழுத்துப் போன பொய்களையே சொல்லி வாக்கு கேட்க நான் மக்களிடையே வரவில்லை.
மக்கள் நம் பக்கம் என்பதால், உழைப்போம்; அயராது உழைப்போம்; எந்தத் தடையெனினும் இடறிவிட்டு இன்முகத்தோடு உழைப்போம்; வெற்றி நமதே!” என்று கூறியுள்ளார் கருணாநிதி.