கோலாலம்பூர் – ‘மலேசியாவைக் காப்பாற்றுவோம்’ என்ற இயக்கத்தின் மூலம் மக்கள் பிரகடனத்தில் 1 மில்லியன் கையெழுத்துகளைப் பெற்றுவிட்டாலும், ஒன்று ஆகப் போவதில்லை என துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
“ஒரு மில்லியன் கையெழுத்துகள் பெற்றுவிட்டால், எந்த சட்டப்பூர்வ நடவடிக்கையோ அல்லது ஒழுங்கு நடவடிக்கையோ எடுக்க வேண்டும் என்று எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை” என்று செராசில் நடைபெற்ற உள்துறை அமைச்சு குடும்ப விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது சாஹிட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும், அந்தக் கையெழுத்தை வைத்துக் கொண்டு யாரையெல்லாம் அவர்கள் சந்திக்க நினைக்கிறார்களோ, சந்திக்கட்டும் என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், “நஜிப் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கையுடன், நாடு முழுமையிலும் நடத்திய கையெழுத்து சேகரிப்பின் மூலம் இதுவரை பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
இக்கையெழுத்துகளை முன்னிறுத்தி மாமன்னரைச் சந்திக்கவுள்ளதாகவும் மகாதீர் குறிப்பிட்டார்.