சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் முழு அளவிலான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 19-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 3,454 பேர், பெண் வேட்பாளர்கள் 320 பேர், திருநங்கைகள் 2 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிகபட்சமாக ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.82 கோடி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 2.88 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.93 பேரும் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.02 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தேர்தலில் 1.40 லட்சம் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
1.50 லட்சம் மின்னணு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 66,007 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27,961 வாக்குச்சாவடிகள் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். சுமார் 30,000 துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.