சென்னை – தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சற்றுமுன் (7.10) வாக்குப்பதிவு தொடங்கியது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1.38 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒரே கட்டமாக தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பணப்பட்டுவாடா புகாரால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் நீங்கலாக மீதமுள்ள 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. இத்தேர்தலில் மொத்தம் 5.82 இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.
மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக மொத்தம் 65,762 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்காக மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 596 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இன்று நடைபெறும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி சீல்வைக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.
மே 19-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்; அத்தொகுதிகளில் 25-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.