சென்னை – அதிமுக பெரும்பான்மை பெற்று விட்டது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா தமிழக மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஜெயலலிதா இல்லத்தில் பலரும் வரிசையாக வந்து பூக்கூடைகள் கொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் காட்டப்பட்டன. ஜெயலலிதா ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு வாழ்த்துகளையும், பூக்கூடைகளையும் பெற்றுக் கொண்டார்.
ஜெயலலிதா தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கூறியதாவது:
“நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு அமோக வெற்றியை வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி வழங்கியிருக்கிறது. அதற்காக தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எனது உள்ளத்தில் எழும் நன்றியுணர்வைக் கூற தமிழ் அகராதியில் போதுமான வார்த்தைகள் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
1984ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதன்முறை. என்னை எதிர்த்து 10 கட்சிகள் அணிவகுத்து நின்றபோதிலும், எனக்குப் பின்னால் பெரிய கூட்டணி இல்லையென்ற போதிலும் மக்கள் எனக்கு ஆதரவு தந்திருக்கின்றார்கள்.
நான் ஆண்டவனை நம்பி மக்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டேன். மக்கள் என்னை கைவிடவில்லை. அவர்கள் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தேன். மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரத்தோடு நான் பிரச்சாரம் செய்து வந்தேன். அதற்கு பெரிய வெற்றி கிடைத்திருக்கின்றது.
எனது வாழ்வு தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். எனக்கு வேறுவிதமான ஆர்வங்கள் இல்லை. எனது இறுதி மூச்சு வரை தமிழக மக்களுக்குப் பாடுபடுவதுதான் எனது குறிக்கோள்.
எனது நன்றியைத் தமிழக மக்களுக்கு எனது நடவடிக்கைகளாலும், தேர்தல் அறிக்கையில் நான் கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலமும் காட்டுவேன்” என்று ஜெயலலிதா கூறினார்.
ஜெயலலிதா பூரிப்புடன், முகத்தில் எப்போதும் சிரிப்புடன் காணப்பட்டார். தனது உரையின் இடையில் எம்ஜிஆரின் பெயரையும் அவர் வழக்கம்போல் குறிப்பிட்டார்.
தமிழில் உரையாற்றிய பின்னர், மேற்கூறிய அதே கருத்துகளை உள்ளடக்கிய உரையை அழகான ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். அந்த உரையை ஆங்கிய செய்தித் தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பின.