கெய்ரோ – பாரீசிலிருந்து கெய்ரோ நோக்கிச் சென்ற எகிப்து விமானம் ரேடார் தொடர்பிலிருந்து விடுபட்டதையடுத்து அதனைத் தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அவ்விமானம் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டதாக முன்னணி ஊடகங்கள் சில தகவல் தெரிவித்திருந்தன.
அதனைத் தொடர்ந்து, அவ்விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்ற கூற்றின் அடிப்படையில் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சு, பிரான்சுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
அவ்விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
முதலில் 69 பேர் அவ்விமானத்தில் இருந்ததாகத் தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில், அவ்விமானத்தில் 30 எகிப்தியர்கள், 15 பிரஞ்சு நாட்டவர்கள் உட்பட மொத்தம் 66 பேர் இருந்ததாகத் தற்போதைய தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
எனினும், இதுவரை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடித்ததாகத் தகவல்கள் வெளிவரவில்லை. எனவே பல ஊடகங்கள் இந்த அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சித்துள்ளன.