கெய்ரோ: விபத்துக்குள்ளானதாக நம்பப்படும் எகிப்து ஏர் 804 விமானத்தைத் தேடும் பணிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து வரும் வேளையில், கடல் பகுதியில் சிதறிய உடல் பாகங்கள், உடைந்த விமானப் பகுதிகள் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னால் புகை ஏற்பட்டதாகவும் இதனால், விமானம் விழுவதற்கு முன்னால் நெருப்பு பிடித்திருக்கக்கூடும் என்றும் முதல் கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிரான்ஸ் அல்லது எகிப்து நாட்டவர்களாவர்.
விமானம் விழுவதற்கு முன்னால் சுழன்றடித்து அதன் பின்னர் விழுந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இது குறித்து கருத்துரைத்துள்ள எகிப்து பொது வான் போக்குவரத்து அமைச்சர், தொழில் நுட்ப காரணங்கள் என்பதைவிட பயங்கரவாதச் செயல் மூலமாகவே விமானம் விழுந்து நொறுங்கியிருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.
56 பயணிகள், 10 ஊழியர்கள் இந்த விமானத்தில் பயணம் செய்தனர்.