அசாம் – அசாம் மாநில முதலமைச்சராக பதவியேற்க உள்ளதை அடுத்து, தனது மத்திய அமைச்சர் பதவியை சர்பானந்தா சோனாவால் ராஜினாமா செய்துள்ளார்.
அசாமில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 86 தொகுதிகளில் வென்று, ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து புதிய ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அசாம் சட்டமன்ற பாரதிய ஜனதா கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற பாரதிய ஜனதா கட்சி தலைவராக சர்பானந்தா சோனாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து வரும் 24-ஆம் தேதி, அசாம் மாநில முதலமைச்சராக சர்பானந்தா சோனாவால் பதவியேற்க உள்ளார். இதையொட்டி, தனது மத்திய அமைச்சர் பதவியை சர்பானந்தா ராஜினாமா செய்துள்ளார்.
அவரது பதவி விலகலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், சர்பானந்தா வகித்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையை ஜிதேந்திர சிங் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.