கோலாலம்பூர் – தலைநகரில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி பல வாகனங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரலாம் என தனியார் வழக்கறிஞரான ஷியாரெட்சான் ஜோஹான் தெரிவித்துள்ளார்.
“உதாரணமாக, இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் பொறியியல் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முடியும்.”
“ஆதாரங்கள், நேரடிச் சாட்சிகள், நாளிதழ்களின் தகவல்கள் மற்றும் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இந்தச் சம்பவத்தையடுத்து செய்யப்பட்ட செலவுகளுக்கான ரசீதுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சாட்சியம் இருக்க வேண்டும்” என்று பெர்னாமாவிடம் அளித்துள்ள தகவலில் ஷியாரெட்சான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் பட்சத்தில் கோலாலம்பூர் மாநகரசபை (டிபிகேஎல்) அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கோலாலம்பூர் மேயர் மொகமட் அமின் நோர்டின் அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 12-ம் தேதி, ஜாலான் பந்தாய் பாரு, ஜாலான் துங்கு அப்துல் ஹாலிம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.