சிங்கப்பூர் – நாடெங்கிலும் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றைப் பேணிக்காப்பதில் எப்போதுமே தீவிர கவனம் செலுத்தி வரும் நாடு சிங்கப்பூர்.
இந்நிலையில், கழிவறை சுத்தமாக இல்லையென்றால், உடனடியாக அறிவிக்கும் படி, புதிய கழிவறைக் கண்காணிப்பு முறை (toilet-monitoring system) ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள் சிங்கப்பூரின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி முகமையைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.
எவ்வளவு அதிகமாக அந்தக் கழிவறைப் பயன்படுத்தப்பட்டுள்ளது, அந்த அறையில் கழிவுகளில் காணப்படும் அம்மோனியா, ஹைட்ரஜன் சல்பைட் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் துர்நாற்றத்தின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் புதிய கருவிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு கழிவறை சுத்தம் செய்யப்பட வேண்டிய தேவையைக் காட்டும்.
ரெஸ்ட்ரூம் விசிட்டிலிசெர் சிஸ்டம் (Restroom Visitilizer System) என்ற இந்த முறை கடந்த இரண்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் சுமார் 60 பொதுக் கழிவறைகளில் சோதனை முயற்சிகளுக்காகப் பயன்பாட்டில் உள்ளது.
மெரினா பே சேண்ட்ஸ், சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலை, ரிவர் சபாரி போன்ற பொதுமக்கள் அதிகம் வருகை புரியும் இடங்களிலுள்ள கழிவறைகளிலும், தியோங் பாரு, மேக்ஸ்வெல் மற்றும் சிராங்கூன் கார்டன் புட் சென்டர்ஸ் என இன்னும் பல உணவகங்களிலும் இந்தக் கருவிகள் செயல்பாட்டில் உள்ளன.