புதுடெல்லி – ஸ்மார்ட் நகரங்கள்’ பட்டியலில் மேலும் 13 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னோ முக்கிய இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு மாநிலம் சார்பில் பரிந்துரைக்கப்படும் ஸ்மார்ட் நகரங்களை தீர்மானிக்க மத்திய நகர்ப்புற அமைச்சகம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது, அம் மாநிலத்தின் நகரங்களின் எண்ணிக்கை, அதன் மக்கள் தொகை, வளர்ச்சி மற்றும் புவிஇயல் சமத்துவம் ஆகியவற்றை பொறுத்து இறுதி முடிவு எடுத்து தேர்ந்தெடுத்து வருகிறது.
இதற்கான போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்ட 23-இல், தேர்ந்தெடுக்கப்பட்ட 13 நகரங்களின் பெயர் இன்று காலை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.
இதில், முதல் பெயராக உபியின் தலைநகரான லக்னோ இடம் பெற்றுள்ளது. இம் மாநிலத்தில் அடுத்த வருடம் துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது.
இதை அடுத்து வாரங்கல்(தெலுங்கானா), தரம்சாலா (இமாச்சாலப் பிரதேசம்), சண்டிகர், ராய்பூர் (சத்தீஸ்கர்), நியூ டவுன் கொல்கத்தா, பாகல்பூர் (பிஹார்), பண்ணாஜி (கோவா), போர்ட் பிளேயர் (அந்தமான் நிகோபாத்), இம்பால் (இம்பால்), ராஞ்சி (ஜார்கண்ட்), அகர்தாலா (திரிபுரா) மற்றும் பரீதாபாத் (ஹரியானா) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இது குறித்து மத்திய அமைச்சரான வெங்கய்ய நாயுடு கூறுகையில், ‘அதி விரைவு போட்டியில் 13 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதில் மத்திய அரசு 30.229 கோடி ரூபாய் முதலீடு செய்யும். இத்துடன் இதுவரை அறிவிக்கப்பட்ட 33 ஸ்மார்ட் நகரங்களுக்கான முதலீடு ரூபாய் 80.789 கோடி ஆகும்.’ எனத் தெரிவித்தார்.