கோலாலம்பூர் – அவதூறு வழக்கில் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு 200,000 ரிங்கிட் (2 லட்சம் ரிங்கிட்) வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உத்துசான் மலேசியா தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இதனால், அன்வாருக்கு உத்துசான் 2 லட்சம் ரிங்கிட் இழப்பீடு கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
மேலும், உத்துசான் 5,000 ரிங்கிட் செலவுகளையும் சேர்த்துக் கட்ட வேண்டும் என்றும் நீதிபதி பிரசாத் சந்தோஷம் உத்தரவிட்டுள்ளார்.
இத்தீர்ப்பு அறிவிக்கப்படும் போது, அவருடன் நீதிபதி ஜபாரியா மொகமட் யூசோப் மற்றும் நீதிபதி அஸ்மாபி மொகமட் ஆகியோரும் உடன் இருந்தனர்.
கடந்த 2012-ம் ஆண்டு பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அன்வார் அளித்த நேர்காணலை மேற்கோள் காட்டி, அவர் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக உத்துசான் செய்தி வெளியிட்டிருந்தது.
அதனையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு, உத்துசான் மற்றும் அதன் தலைமை எடிட்டர் அப்துல் அஜிஸ் இசாக்குக்கு எதிராகத் தொடுத்த அவதூறு வழக்கில் அன்வார் தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றார்.
மறைந்த நீதிபதி விடி சிங்கம் ஓய்வு பெறுவதற்கு முன்னர் வழங்கிய தீர்ப்பில், உத்துசான் பத்திரிகை பொறுப்புணர்ச்சியை பின்பற்றத் தவறியாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஹுய் சியூ கெங், வெளியிட்ட தீர்ப்பில், அன்வாருக்கு 200,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்துசானுக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.