புதுடெல்லி – கடந்த 17 மாதங்களில் பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், உத்தரபிரதேச மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 361 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் அசாமில், தீக்காயங்களினால் கவுகாத்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது சிறுவனுக்கு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்றப்பட்டதால், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.
உ.பி.,க்கு அடுத்து குஜராத் மாநிலத்தில் 292 பேரும், மகாராஷ்டிராவில் 276 பேரும், டில்லியில் 264 பேரும் பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவல், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தகவல் கேட்ட கோத்தாரி கூறுகையில், பட்ஜெட் குறைப்பு காரணமாக எய்ட்ஸ் விழிப்புணர்வு திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
உரிய பரிசோதனை செய்யப்படாமல் ரத்தம் ஏற்றப்படுவதால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது நடந்து கொண்டே உள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இது மிகவும் முக்கியமான விஷயம். அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார்.