கோலாலம்பூர் – சிறார் பாலியல் பலாத்கார சம்பவங்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கில் வழக்கை ஒரு பாடகமாகக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார்.
அது போன்ற சூழலுக்குள் குழந்தைகள் சிக்கிக் கொள்ளாமல் நாம் தான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
“குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நம்முடையது. இது போன்ற மோசமான சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று நஜிப் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியக் குழந்தைகளை ஹக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதை அறிந்து தான் மிகுந்த ஆத்திரமும், சோகமும் அடைந்ததாக நஜிப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 முதல் 2014-ம் ஆண்டு வரையில், 6 வயது முதல் 12 வயது வரையிலான மலேசியக் குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களைப் புரிந்ததை ஹக்கில் ஒப்புக் கொண்டதையடுத்து, கடந்த ஜூன் 6-ம் தேதி, லண்டன் நீதிமன்றம் அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.