Home Featured உலகம் “அமெரிக்க அதிபராக ஹிலாரியே சிறந்தவர்” – ஒபாமா ஆதரவு!

“அமெரிக்க அதிபராக ஹிலாரியே சிறந்தவர்” – ஒபாமா ஆதரவு!

730
0
SHARE
Ad

வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் வேட்பாளராகத் தேர்வு பெற்று சாதனை பெற்றிருக்கும் ஹிலாரி கிண்டனுக்கு, பதவி விலகிச் செல்லும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

amd-hillary-obama-jpg“எனக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் பதவியை வகிக்க அனைத்து வகையிலும் அனுபவம் வாய்ந்த சிறந்தவர் ஹிலாரி”  என்றும் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒபாமாவின் ஆதரவைத் தொடர்ந்து, ஹிலாரிக்கு மேலும் ஆதரவு பெருகும் என்றும் குறிப்பாக, கறுப்பின மக்களிடையே அவருக்கு ஆதரவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

ஒபாமாவின் ஆதரவைத் தொடர்ந்து உடனடியாக பதிலடி கொடுத்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், “குறுக்குப் புத்தி கொண்ட (Crooked) ஹிலாரிக்கு ஒபாமா ஆதரவு கொடுத்துள்ளார். இதன் மூலம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒபாமா ஆட்சி தொடர விரும்புகின்றார். ஆனால் வேறு யாரும் அதை விரும்பவில்லை” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.

ஹிலாரி பல முனைகளில் சாதனை படைப்பாரா?

அமெரிக்காவின் முதல் பெண் வேட்பாளராக ஏற்கனவே சாதனை படைத்து விட்ட ஹிலாரி, அதிபராகத் தேர்வு பெற்றால், பல முனைகளில்  சாதனை புரிந்தவராகக் கருதப்படுவார். எட்டு ஆண்டுகள் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரே தொடர்ந்து அமெரிக்காவை ஆண்டு கொண்டிருக்கும் நிலையில், அடுத்து மற்றொரு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வு பெறுவதும் அமெரிக்காவில் அபூர்வமாகவே நடைபெறும்.

பொதுவாக, இந்த முறை ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் என்றால், அடுத்து குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் அமெரிக்க மக்களின் வழக்கம். ஆனால், ஹிலாரி வென்றால் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரே அதிபராகத் தொடரும் சாதனை நிகழும்.

அடுத்து, அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஹிலாரியாகத்தான் இருப்பார்.

அதை விட முக்கியம், ஒரு முன்னாள் அதிபரின் மனைவி தேர்வு பெறுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் ஓர் அமெரிக்க அதிபரின் மனைவி அதிபராகத் தேர்வு பெற்றதில்லை.

இதன் மூலம், முன்னாள் அதிபராக இருந்த பில் கிளிண்டன் மீண்டும் வெள்ளை மாளிகையில் நுழைந்து, நான்கு ஆண்டுகள் அங்கு, மீண்டும் வெறும் கணவராகத் தங்கியிருக்கப் போகும் அதிசயமும்  நிகழும். வெள்ளை மாளிகையிலிருந்து அதிபராக பதவி வகித்து விட்டு வெளியேறுபவர், பொதுவாக மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் நுழையும் நடைமுறை வழக்கம் அமெரிக்காவில் இல்லை. ஆனால், இந்த முறை ஹிலாரி வென்றால், பில் கிளிண்டன் மீண்டும் வெள்ளை மாளிகையில் நுழைவார், அதிபரின் கணவராக!

இனியும் இதுபோன்ற வித்தியாசங்கள் அமெரிக்க அரசியலில் நடைபெறுமா என்பது சந்தேகம்தான்! எனவே, இந்த சுவாரசியங்களை – வித்தியாசங்களை – அனுபவிப்பதற்காகவே அமெரிக்க மக்கள் அதிபராக ஹிலாரியைத் தேர்ந்தெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.