சென்னை – மத்திய அரசு சமஸ்கிருதத்தை மீண்டும் திணிக்க முயற்சித்தால், பேரபாயம் ஏற்படும் என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இது குறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள தகவலில்,
“பா.ஜ.க. அரசு மத்தியில் அமைந்ததற்குப் பிறகு இந்தி மொழி மற்றும் சமஸ்கிருத மொழித் திணிப்பு நடவடிக்கைகளில் திடீர் வேகம் காட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழி அகற்றப்பட்டு, சமஸ்கிருதம் புகுத்தப்பட்டது.”
“சமஸ்கிருத வாரம், இந்தி வாரங்கள் தாராளமாக கொண்டாடப்படுகின்றன. வழக்கொழிந்துபோன சமஸ்கிருத மொழியில் சிறப்புச் செய்திகள் வாசிக்க அரசு நிறுவனமான தூர்தர்ஷனில் அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.”
“மொழி வெறி – கலாச்சார வெறி அடிப்படையிலான இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகள் நாட்டை வளர்ச்சிப் பாதையிலிருந்து தடம் புரளச் செய்வதோடு, இந்திய மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பிச் சிதைத்திடும் பேரபாயத்தையும் ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்கிறேன்!” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.