கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை சிரம்பானில் மைவாட்ச் அமைப்பின் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீ.சஞ்சீவனும், பெண் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவரும் தங்கும்விடுதி ஒன்றில் பக்கத்து பக்கத்து அறைகளில் காணப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
எனினும், அவர்கள் இருவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் என்றும், இருவரும் கைது செய்யப்படவோ அல்லது அவர்களிடமிருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்படவோ இல்லை என்றும் கூறப்படுகின்றது.
இது குறித்து புக்கிட் அமானின் ஜெஐபிஎஸ் (Integrity and Standard Compliance Department) பதிவு செய்துள்ள அறிக்கையின் படி, ஜெஐபிஎஸ் அதிகாரிகள், நெகிரி செம்பிலான் இஸ்லாமிய விவகாரங்கள் துறை ஆகியவற்றுடன் இணைந்து அந்த தங்குவிடுதிக்கு இரவு 1.30 மணியளவில் சென்றதாகத் தெரிவித்துள்ளது.
தங்களை அறிமுகம் செய்து கொண்டதற்குப் பிறகு, அக்குழு அங்கு 10 நிமிடங்களுக்கு அறை 1002-க்கு வெளியே காத்திருந்ததாகவும், பின்னர் அந்த அறையில் இருந்த ஜெம்போல் காவல்நிலையத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர் கதவைத் திறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண் அதிகாரி முழு உடையில் இருந்ததாகவும், தலையை மறைக்கும் துணி (headscarf) அணிந்திருந்ததாகவும் ரெய்டு நடத்திய அதிகாரிகள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், அந்த அறையில் நாற்காலி ஒன்றில் பெண்ணின் உள்ளாடை இருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் பின்னர், அதற்கு அடுத்த அறையான 1003-க்குச் சென்ற அதிகாரிகள், அங்கு சஞ்சீவன் இருப்பதைக் கண்டுள்ளனர்.
முழு உடை அணிந்திருந்த சஞ்சீவனுடன் வேறு யாரும் இல்லை என்றும், பெண்ணின் உடைகள் எதுவும் அங்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அவர்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், சஞ்சீவனும், அந்தப் பெண் காவல்துறை அதிகாரியும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளத் தான் அங்கு வந்துள்ளனர் என்பதும், வேறு தவறான உறவு எதுவும் இல்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அவர்கள் இருவரும் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை என ஓசிபிடி ஏசிபி முகமட் சாக்கி ஹாருன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் எந்தத் தவறான நோக்கமும் கிடையாது என சஞ்சீவன் தரப்பில் இருந்தும் ஸ்டார் இணையதளத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.