கடந்த மே 27 முதல் மே 30 வரை அமெரிக்காவின் சாந்தா கிளாரா நகரில் நடைபெற்ற புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு, இந்தத் துறை தொடர்பான முக்கியமான அனைத்துலக மாநாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாடு குறித்த சில முக்கிய சுவாரசியத் தகவல்களை இங்கே தருகின்றோம்:
- இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மொத்த நாடுகள் 8. அவை இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ் கனடா, இங்கிலாந்து அமெரிக்கா ஆகியவையாகும்
- இந்த நாடுகளைப் பிரதிநிதித்து கலந்து கொண்டவர்கள் 105 பேர்.
- இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 200.
- இந்த மாநாட்டில் பங்கு பெற்ற உலகத் தமிழ்க் கல்விக் கழகம் தொடர்புடைய பள்ளிகள் 22 ஆகும்.
- மலேசியாவிலிருந்தும் சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட மலேசியக் குழுவினர்…
- இந்த மாநாட்டில் தமிழ்க் கல்வியை பல கோணங்களில் ஆராயும் 32 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
- கல்வியாளர்கள், மற்ற துறையினர் என 35 பேர் இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படைத்தனர்.
- மலேசியா நாட்டிலிருந்தும் பலர் ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தனர்.
மாநாட்டில் பயிலரங்கு நடத்திய முனைவர் முல்லை இராமையா மாநாட்டில் உரையாற்றுகின்றார்…
- மாநாட்டில் படைக்கப்பட்ட குறிப்பிடத்தக்க மலேசிய ஆய்வு, முனைவர் முல்லை இராமையா சமர்ப்பித்த “ஒலிவழி தமிழ் கற்றல்” என்ற ஆய்வுடன் கூடிய பயிற்சிக் கருத்தரங்கமாகும்.
- மலேசியாவில் இருந்து பல பங்கேற்பாளர்களும், கல்வியாளர்களும் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
“எல்லோருக்கும் எளிய தமிழ்” கட்டுரை படைத்த கஸ்தூரி இராமலிங்கம்…
- மலேசியாவில் இருந்து படைக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் ஒன்று ‘எல்லோருக்கும் எளிய தமிழ்’ என்பதாகும். கணினித்துறை வல்லுநர் முத்து நெடுமாறனும், மாசாய் தமிழ்ப் பள்ளி ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கமும் இணைந்து தயாரித்த இந்த ஆய்வை, மாநாட்டில் கஸ்தூரி இராமலிங்கம் படைத்தார்.
- மேலும் 8 ஆசிரியர் பயிலரங்கு பட்டறைகள் இந்த மாநாட்டில் நடத்தப்பட்டன.
மாநாட்டில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகின்றார் முத்து நெடுமாறன்…
- மாநாடு தொடர்பில் பலதரப்பட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மொத்தம் 49 நிகழ்ச்சிகள் இந்த மாநாட்டில் நடத்தப்பட்டன.
- இந்த மாநாட்டின் கலைநிகழ்ச்சிகளில் சுமார் 400 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நாடக வடிவில் படைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் 7. நாட்டியம் வடிவிலான நிகழ்ச்சிகள் 26. பாடல்கள் 3. இசைக்குழு வடிவங்கள் 2. பட்டிமன்றங்கள் 2.
- சாந்தா கிளாரா வட்டாரம் மற்றும் அதன் சுற்று வட்டாரம், நகர்களில் அமைந்துள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பலர் இந்த கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நடத்தப்பட்ட மாணவர் கலைநிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ச்சி படைத்த ஆசிரியர் குழுவினரும், மாணவர்களும்…
- இந்த மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 12 ஆகும்.
- புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை முன்னிட்டு பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன. இந்தப் போட்டிகள் சிலவற்றில் மலேசியர்களும் குழு அளவிலும் தனிநபர்களாகவும் வெற்றி பெற்றனர்.
-
குறும்படம் போட்டியில் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்ற நாடு மலேசியா. வெற்றி பெற்றவர் மாசாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஹரிப்பிரியா ( வயது 11-14 இடைப்பட்ட பிரிவு) . பரிசுத் தொகை அமெரிக்க டாலர் 250.
- குறும்படம் போட்டியில் 15 முதல் 18 வயது வரையிலான பிரிவினருக்கான போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெற்ற நாடு மலேசியா. வெற்றி பெற்றவர், பேராக் மாநிலத்தைச் சேர்ந்த ரெபேக்கா செல்வி சூசை. பரிசுத் தொகை அமெரிக்க டாலர் 350.00. மேற்பார்வை ஆசிரியர்: திரு மேகவர்வர்ணன்.
-
மின்னியல் நூல் போட்டியில் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்ற நாடு மலேசியா. வெற்றி பெற்றவர் மாசாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கீர்த்தனா கணேஸ். பரிசுத் தொகை அமெரிக்க டாலர் 200.
-
மின்னியல் நூல் போட்டியில் மூன்றாம் நிலையில் வெற்றி பெற்ற நாடு மலேசியா. வெற்றி பெற்றவர் மாசாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த நர்மதா மோகன். பரிசுத் தொகை அமெரிக்க டாலர் 150.
-
சிறு கதைப் போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெற்ற நாடு மலேசியா. வெற்றி பெற்றவர் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த தர்ஷினி மாசிலாமணி. பரிசுத் தொகை அமெரிக்க டாலர் 150.
-செல்லியல் தொகுப்பு