Home 13வது பொதுத் தேர்தல் பொதுத் தேர்தலில் முன்னணி போர்க்களமாக மாறப்போகும் ஜோகூர் மாநிலம்

பொதுத் தேர்தலில் முன்னணி போர்க்களமாக மாறப்போகும் ஜோகூர் மாநிலம்

663
0
SHARE
Ad

State-by-State-Johorஜோகூர் பாரு, மார்ச் 18 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்றுவதில் தேசிய முன்னணி அரசுக்கும், மக்கள் கூட்டணிக்குமிடையே நிலவும் பலத்த போட்டி, அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களின் மூலமும், முன்னேற்பாடுகளின் மூலமும் தெளிவாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது.

ஜோகூர் மாநிலம் எப்போதுமே தேசிய முன்னணி அரசின் பாதுகாப்பான மாநிலம் என்ற நம்பிக்கையை முறியடிக்கும் விதமாக, மக்கள் கூட்டணி கட்சியினர் ஜோகூரில் தொடர்ந்து தங்களது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் கூட்டணி கட்சியினர் குறைந்தது 12 நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளையாவது கைப்பற்றிவிட திட்டமிட்டிருக்கின்றனர். அவற்றுள் இஸ்கண்டார்  மலேசியா வர்த்தகப் பகுதியைச் சுற்றியுள்ள  5 நாடாளுமன்ற இடங்களான கேலாங் பாத்தா, பூலாய், பாசீர் கூடாங், ஜோகூர் பாரு மற்றும் தெபுராவ் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளும் அடங்கும்.

#TamilSchoolmychoice

குறிப்பாக இந்த 5 இடங்களில் எதிர்கட்சிகளுக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலாங் பாத்தாவில் 104,972 வாக்குகளும், பூலாயில் 99,542 வாக்குகளும், பாசீர் கூடாங்கில் 98,798 வாக்குகளும், ஜோகூர் பாருவில் 96,520 வாக்குகளும், தெபுராவில் 88,447 வாக்குகளும் உள்ளன.

மேலும் கூலாய், பக்ரி, குளுவாங், செகாமட், பத்து பகாட், பெங்கேராங், லாபிஸ் ஆகிய இடங்களையும் கைப்பற்றிவிடும் இலக்குடன் மக்கள் கூட்டணியினர் களமிறங்கியுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டுத் தேர்தலில், பி.கே.ஆர் கட்சியினர் கடுமையாக உழைத்தும் கூட, அவர்களால் பக்ரி தொகுதியில் மட்டும் 722  வாக்குகள் வித்தியாசத்தில் குறைந்த அளவிலான  வெற்றியை மட்டுமே அடைய முடிந்தது.

எனவே, இந்த முறை மக்கள் கூட்டணி தகுந்த முன்னேற்பாடுகளுடன் ஜோகூர் மாநிலத்தில் நுழைந்திருப்பதால், பெரும்பான்மை இடங்களைப் பெறமுடியுமா என்பது தான் இப்போது அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வி.

தேசிய முன்னணி சார்பாக புதிய வேட்பாளர்கள்

அதேநேரத்தில் தேசிய முன்னணி அரசு ஜோகூர் மாநிலத்தில், 26 நாடாளுமன்ற தொகுதிகளில் பலவற்றில் புதிய வேட்பாளர்களை நிறுத்த முடிவுசெய்துள்ளது. காரணம் இவர்களில் பலர் இரண்டு தவணைகளுக்கும் கூடுதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

தேசிய முன்னணி அரசின் 56 மாநில சட்டமன்ற  இடங்களில் இந்த முறை மூத்த உறுப்பினர்கள் ஓய்வு பெறச் செய்யப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக புதிய வேட்பாளர்கள் இடம் பெறவுள்ளனர்.

தற்போது, தேசிய முன்னணி அரசின் கூட்டணிக் கட்சிகளான அம்னோவின் கட்டுப்பாட்டில் 32 மாநில சட்டமன்றங்கள்  மற்றும் 12 நாடாளுமன்ற தொகுதிகளும், ம.சீ.சவின் கீழ் 12 மாநில சட்டமன்றங்கள்  மற்றும் 7 நாடாளுமன்ற தொகுதிகளும், ம.இ.கா வின் கட்டுப்பாட்டில் 4 மாநில சட்டமன்றங்கள்  மற்றும் 1 நாடாளுமன்ற தொகுதிகளும், கெராக்கான்  கட்சியின் கீழ் 2 மாநில சட்டமன்றங்கள் மற்றும் 1 நாடாளுமன்றத் தொகுதியும் உள்ளன.

எதிர்க்கட்சிகளின் தொகுதிகள்

கடந்த 2008 ஆம் ஆண்டுத் தேர்தலில், மக்கள் கூட்டணியில் ஜ.செ.க 4 மாநில சட்டமன்றங்களையும் (செனாய், ஸ்கூடாய், பொந்தியான், மெங்கிபோல்) மற்றும் 1 நாடாளுமன்றத் தொகுதியையும் (பக்ரி) வென்றது. பாஸ் கட்சி, மகாராணி மற்றும் சுங்கை அபோங் ஆகிய இரு மாநில இடங்களைக் கைப்பற்றியது.

பக்ரி தொகுதியில் ஜ.செ.க  கட்சி  722  வாக்குகள் வித்தியாசத்தில் குறைந்த அளவிலான வெற்றியை அடைந்தது. அதே நேரத்தில் பாஸ் கட்சி உறுப்பினர் டாக்டர் முகமத் டாஸ்லிம்பி 158 வாக்குகள் பெற்று மகாராணி தொகுதியையும்  கைப்பற்றினார்கள்.

ம.சீ.சவின் உறுப்பினர் கோ டி டி 295 வாக்குகள் பெற்று தங்காக் தொகுதியையும் மேலும் பெங்கராம் தொகுதியில் ம.சீ.சவைச் சேர்ந்த டத்தோ கோ சீ சை  575 வாக்குகள் பெற்றும் வெற்றியடைந்தார்.

எனவே, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி காணப்பட்ட இந்த தொகுதிகள் எல்லாம் மீண்டும் கடுமையான போட்டிகளுக்கு இலக்காகும் என உறுதியாக நம்பலாம்.

அதிகம்  எதிர்பார்க்கப்படும் மற்றொரு சட்டமன்ற தொகுதியான ஸ்தூலாங்கில் கடந்த 2004 ஆண்டு பொதுத்தேர்தல் முதல்  ஜ.செ.க, தேசிய முன்னணி மற்றும் பி.ஆர்.எம் ஆகிய கட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குறிவைத்துள்ள ஜோகூர் மாநிலத் தொகுதிகள்

எனவே வருகிற 13 ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில், ஜ.செ.க மற்றும் பாஸ் என்ற பலம் மிக்க இரண்டு கட்சிகளுடன் களமிறங்கும் பி.கே.ஆர் கட்சியில் அதன் தேசியத் தலைவர்கள் உட்பட மேலும் இரண்டு மூத்த உறுப்பினர்கள் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது.

ஜோகூரில் கடந்த 2012 செப்டம்பர் மாதம் வரையிலான கணக்கின்படி, ,மொத்தம் 1,579,877 வாக்காளர்கள் உள்ளனர் அதில் ஆண்கள் 49.99% சதவீதமாகவும் மற்றும் பெண்கள் 50.01% சதவீதமாகவும் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் 300,0000 புதிய வாக்காளர்கள் இணைந்துள்ள ஜோகூர் மாநிலத்தில், பி.கே.ஆர் கட்சி, தேசிய முன்னணிக்கு எதிராக களமிறங்கி அவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் ஜோகூர் மாநிலத்திற்கு முக்கியத்துவம்?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணி புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற வேண்டுமென்றால் அவர்கள் தேசிய முன்னணியின் கைவசமுள்ள சில தொகுதிகளையாவது கூடுதலாக வென்றெடுக்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அவர்களுக்கு கிடைக்கும்.

அந்த வகையில் தேசிய முன்னணி பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள அவர்களின் கோட்டையான ஜோகூர் மாநிலத்திற்குள் நுழைந்து சில தொகுதிகளை கைப்பற்றினால் அதனால் தேசிய முன்னணியின் அடித்தளமும் நொறுங்கும், மத்திய அரசாங்கத்தை அமைக்கும் தங்களின் கனவும் பலிக்கும் என்ற வியூகத்தோடு மக்கள் கூட்டணித் தலைவர்கள் ஜோகூர் மாநிலத்தின் பல பகுதிளிலும் அடிக்கடி முகாமிட்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.